Published : 20 Sep 2021 01:27 PM
Last Updated : 20 Sep 2021 01:27 PM
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை மறைமுகமாகத் தனது ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்துள்ளார் சோனு சூட்.
பல்வேறு மொழிகளில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருபவர் சோனு சூட். கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து நடிப்பைத் தாண்டி இந்தியா முழுவதும் சமூகநல சேவைகளுக்காகவும் அறியப்பட்டார். இதனாலேயே, அண்மையில் இவர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் கல்விக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோனு சூட்டின் மும்பை வீட்டில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 20 கோடி ரூபாய் வரை சோனு சூட் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சோனு சூட் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. தற்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக சோனு சூட் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எப்போதும் நாம் நம் பக்க கதையைச் சொல்ல வேண்டியதில்லை. காலம் சொல்லும். என்னுடைய வலிமையையும் இதயத்தையும் கொண்டு இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக்கு நானே உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளேன்.
என்னுடைய அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு உயிரைக் காப்பாற்றவும், ஏழைகளைச் சென்றடையவும் காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும், பல்வேறு தருணங்களில் என்னுடைய ஒப்புதல் கட்டணத்தை மனிதநேயப் பணிகளுக்குச் செலவிடுமாறு நிறுவனங்களை நான் ஊக்கப்படுத்தியுள்ளேன். அதுதான் எங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.
கடந்த 4 நாட்களாக நான் சில விருந்தாளிகளைக் கவனிப்பதில் பிஸியாக இருந்ததால் உங்களுக்கு சேவை செய்ய முடியவில்லை. இப்போது மீண்டும் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு சேவை செய்யப் பணிவுடன் வந்துவிட்டேன். என்னுடைய பயணம் தொடரும்".
இவ்வாறு சோனு சூட் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT