Published : 18 Sep 2021 01:56 PM
Last Updated : 18 Sep 2021 01:56 PM
ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விடப் பெரியதில்லை என்று மாணவர்களுக்கு வீடியோ மூலம் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்வின் மீதான பயத்தால் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும், ஒரு மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்டார்.
மாணவர்கள் யார் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று தமிழக முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது மாணவர்களுக்கு சூர்யாவும் வீடியோ வடிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சூர்யா விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.. உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..
மாணவ மாணவிகள் அனைவரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு அண்ணனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குப் போன வாரம் அல்லது போன மாதம் ஏதேனும் ஒரு மிகப்பெரிய கவலை, வேதனை இப்போது இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். நிச்சயமாகக் குறைந்திருக்கும். இல்லாமல் கூடப் போயிருக்கும்.
ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விடப் பெரியதில்லை. உங்கள் மனது கஷ்டமாக இருக்கிறதா? நீங்கள் நம்புகிறவர்கள், உங்களுக்கு ரொம்பப் பிடித்தவர்கள், அப்பா - அம்மா, நண்பர்கள், ஆசிரியர்கள் என்று யார்கிட்டயாவது மனம் விட்டு அனைத்தையும் பேசிவிடுங்கள். இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி என அனைத்துமே கொஞ்ச நேரத்தில் மறைகிற விஷயங்கள்.
இந்தத் தற்கொலை, வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொள்வதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புகிறவர்களுக்கு, அப்பா - அம்மா, குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை.
மறந்துடாதீங்க. நான் நிறையப் பரீட்சைகளில் பெயிலாகி இருக்கிறேன். ரொம்ப ரொம்ப கேவலமான மார்க்குகள் வாங்கியிருக்கிறேன். ஆகையால் உங்களில் ஒருவனாக நிச்சயமாகச் சொல்ல முடியும்.
மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிப்பதற்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. உங்களைப் புரிந்து கொள்ளவும், நேசிக்கவும் நிறையப் பேர் இருக்கிறோம். நம்பிக்கை, தைரியம் இருந்தால் அனைவரும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். பெரிதாக ஜெயிக்கலாம்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே.."
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT