Published : 11 Sep 2021 01:59 PM
Last Updated : 11 Sep 2021 01:59 PM
தான் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகவும்; வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என நேரத்தில் சரியான மனநல சிகிச்சை தனக்கு எப்படி கை கொடுத்தது என்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.
கோன் பனேகா க்ரோர்பதி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். இந்த நிகழ்ச்சியின் சீசன் 13 தற்போது நடைபெற்று வருகிறது. இதில், தீபிகா படுகோனே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது அவர் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் பற்றி பேசினார்.
தீபிகா பேசியதாவது:
2014 ஆம் ஆண்டு தான் எனக்கு மனநல பாதிப்பு இருப்பதை நான் அறிந்து கொண்டேன். நான் மும்பையில் இருந்தேன். என்னைப் பார்க்க எனது பெற்றோர் பெங்களூருவில் இருந்து வந்திருந்தனர். அப்போது அவர்கள் திரும்பிக் கிளம்பும்போது நான் அழுதேன். எனது அழுகை வித்தியாசமாக இருப்பதாக அம்மா கூறினார். நான் அப்படி அழுது பார்த்தது இல்லை என்று கூறிய அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். நான் அம்மா சொன்னதைத் தயங்காமல் செய்தேன். சில மாதங்களுக்குப் பின்னர் நான் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தேன். மன நலம் பொறுத்தவரை ஒருமுறை நீங்கள் குணமாகிவிட்டால் அதை மறந்துவிடக் கூடாது. ஆகையால் தான் நான் என் வாழ்க்கை முறையில் சிற்சில மாற்றங்களைச் செய்து கொண்டேன். அதனால், என்னால் இப்போது இயல்பாக இருக்க முடிகிறது.
எனக்கு மன அழுத்தம் ஏற்பட்ட காலகட்டம் மிகவும் மோசமானது. எனக்கு வெளியில் செல்ல பிடிக்கவில்லை. எந்த வேலையிலும் நாட்டமில்லை. யாரையும் சந்திக்கவும் விரும்பவில்லை. ஏன், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று தோன்றியது. ஆனால் நான் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மீண்டு விட்டேன். அதன் பின்னர் தான் மன நல பாதிப்புகள் மீது உள்ள சமூக ஒடுக்குமுறைகளைத் தகர்க்கும் வகையில் ஓர் அமைப்பை உண்டாக்கி செயல்பட்டு வருகிறேன். நாம் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பார்க்கத் தயங்குவதில்லை. ஆனால், மனநல சிகிச்சை பற்றி வெளிப்படையாகப் பேசுவதில்லை.
அதனால், 2015ல் தொடங்கப்பட்ட அமைப்பு தான் லிவ் லவ் லாஃப் அமைப்பு ( Live Love Laugh Foundation). எனக்கு இப்படி ஒரு மன அழுத்த நோய் ஏற்பட்டால் அதுபோல் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடும் என்பதை உணர்ந்தேன். என் வாழ்வில் ஒரே ஒருவரையாவது மன அழுத்தத்தில் இருந்து மீட்க முடியும் என்றால் அது மிகப் பெரிய பாக்கியம் என நினைக்கிறேன். இப்போது மன நோய்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறைகளை விலக்கும் வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்கிறேன்.
இவ்வாறு தீபிகா கூறினார்.
தீபிகாவின் பேச்சைக் கேட்ட அமிதாப், நீங்கள் இப்போது நலமாக இருப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment