Published : 05 Sep 2021 05:56 PM
Last Updated : 05 Sep 2021 05:56 PM

'தலைவி' வெளியீடு; மல்டிப்ளக்ஸ் முடிவால் கங்கணா நெகிழ்ச்சி

சென்னை

'தலைவி' வெளியீடு தொடர்பாக பி.வி.ஆர் மல்டிப்ளக்ஸ் எடுத்துள்ள முடிவுக்கு கங்கணா ரணாவத் நன்றி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'தலைவி'. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திட்டம் குறித்து சர்ச்சை நிலவியது. இதனால் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 4 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடுவது என்ற முடிவை எடுத்தது 'தலைவி' படக்குழு. இதனைத் தொடர்ந்து இந்தியைத் தவிர்த்து இதர மொழி வெளியீட்டு சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இது தொடர்பாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார் கங்கணா ரணாவத். தற்போது பி.வி.ஆர் மல்டிப்ளஸ் நிறுவனம் 'தலைவி' வெளியீடு தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மக்கள் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தலைவி'. மேலும் கங்கணா ரணாவத்தின் நடிப்புத் திறமையும், அவரது படங்களின் வசூலும் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

'தலைவி' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்குக்கும் 'தலைவி' குழுவுக்கு நன்றி. எனவே, படத்தை இந்த இரண்டு மொழிகளிலும் எங்கள் திரையரங்குகளில் திரையிடுவதில் மிக்க மகிழ்ச்சி.

ஆனால் 'தலைவி' இந்தி வடிவத்தை இரண்டு வாரங்களிலேயே ஓடிடியில் வெளியிட எடுத்திருக்கும் முடிவு எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. அத்தனை மொழிகளிலும் 4 வார இடைவெளியே இருக்க வேண்டும் என்று நடிகை கங்கணா, தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் ஆகியோரிடம் கோருகிறோம். இதனால் பெரிய திரையில் அனைத்து மொழி ரசிகர்களுக்காகவும் 'தலைவி' படத்தைத் திரையிட முடியும். 'தலைவி' குழுவுக்கு எங்கள் வாழ்த்துகள்".

இவ்வாறு பி.வி.ஆர் தெரிவித்துள்ளது.

பி.வி.ஆர் மல்டிப்ளக்ஸின் இந்த அறிக்கைக்கு கங்கணா ரணாவத் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கங்கணா ரணாவத் கூறியிருப்பதாவது:

" 'தலைவி' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளைத் திரையிடலாம் என்று பிவிஆர் தரப்பு எடுத்திருக்கும் முடிவு எங்கள் 'தலைவி' குழுவுக்கு ஒரு நம்பிக்கைக் கீற்று. திரையரங்க அனுபவம் வேண்டும் என்று தங்களுக்குப் பிடித்தமான திரையரங்கில் படம் பார்க்க ஆசைப்படும் திரைப்பட ரசிகர்களுக்கும்தான்.

என்னைப் பற்றியும், 'தலைவி' குழு பற்றியும் நீங்கள் பேசியிருக்கும் கனிவான வார்த்தைகள் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டன. திரையரங்க அனுபவத்தின் மீதிருக்கும் தாகத்தை அடிப்படையாகக் கொண்டு, பேச்சுவார்த்தை மூலமாக நாம் ஒரு தீர்வை எட்ட முடியும் என்று நம்புகிறேன். அப்படி நடந்தால் இந்தி வடிவத்துக்கும் பெரிய திரையில் அன்பும், பாராட்டும் கிடைக்கும்”.

இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x