Published : 04 Sep 2021 05:24 PM
Last Updated : 04 Sep 2021 05:24 PM
'தலைவி' வெளியீடு தொடர்பாக மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களுக்கு கங்கணா ரணாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை விஷ்ணு இந்தூரி தயாரித்துள்ளார். செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த இன்று (செப்டம்பர் 4) சென்னை வந்துள்ளார் கங்கணா ரணாவத். தமிழகத்தில் நிலவிவந்த வெளியீட்டுப் பிரச்சினை சுமுகமாக முடிந்துள்ளது.
இதனிடையே மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களை நசுக்குவதாக கங்கணா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கங்கணா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில் கூறியிருப்பதாவது:
"எந்தத் திரைப்படம் இன்றைய சூழலில் திரையரங்க வெளியீட்டுக்குச் செல்வதில்லை. விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் போன்ற துணிச்சலான சில தயாரிப்பாளர்கள்தான் பெரிய லாபத்தை வேண்டாம் என்று சமரசம் செய்துகொண்டும், பிரத்யேக ஓடிடி வெளியீட்டு வாய்ப்புகளை விட்டுக்கொடுத்தும் இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் காதல்.
இந்தக் கடினமான சூழலில் நாம் ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும். துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ கூடாது. நாங்கள் செய்திருக்கும் படத்தின் முதலீட்டைத் திரும்பச் சம்பாதிக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை உரிமை. இந்தி பதிப்புக்கு 2 வார கால இடைவெளி இருக்கிறது. தமிழுக்கு 4 வாரங்கள் இருக்கிறது. ஆனாலும், அங்கு மல்டிப்ளக்ஸ் தரப்பில் அனைவரும் எங்களுக்கு எதிராக அணி திரண்டு எங்கள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கிறார்கள்.
மகாராஷ்டிரா போன்ற முக்கிய மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் இதுபோன்றதொரு சோதனைக் காலத்தில் இது நியாயமற்ற, கொடூரமான செயல். திரையரங்குகளைக் காப்பாற்ற நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வோம்".
இவ்வாறு கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT