Published : 31 Aug 2021 01:56 PM
Last Updated : 31 Aug 2021 01:56 PM
திரைத் துறையில் 30 ஆண்டுகளாகக் கதாநாயகனாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமாரின் முக்கியமான வெற்றிப் படம் ‘மங்காத்தா’. 2011 ஆகஸ்ட் 31 அன்று வெளியான ‘மங்காத்தா’ அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான வெகுஜன சினிமா ரசிகர்களையும் பெரிதும் திருப்திப்படுத்தி பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படம்.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் திரை வாழ்விலும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது ‘மங்காத்தா’. முந்தைய படங்களில் இளம் நடிகர்களுடன் பணியாற்றி வந்த அவர் அனுபவம் வாய்ந்த நட்சத்திர நடிகர் ஒருவருடன் இணைந்த முதல் படம் இது. மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அஜித்தின் திரைப்படத்துக்கான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதோடு ஒரு இயக்குநராக தன்னிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களையும் சரியான விகிதத்தில் கலந்து புதுமையான கதை, பரபரப்புத் திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யமான திரைக்கதை, நிறைய கதாபாத்திரங்கள், அதை நியாயம் செய்யும் கொண்டாட்டத் தருணங்கள், யுவனின் துள்ளலான பாடல்கள் என ஒரு நிறைவளிக்கும் கமர்ஷியல் பேக்கேஜாக இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார்.
ஒரு நடிகராக அஜித்தின் 50ஆம் திரைப்படம் இது. இந்தப் படம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தார். அதற்கு முன்பு சில சர்ச்சைகளிலும் அடிபட்டிருந்தார். இதையெல்லாம் தாண்டி 50ஆம் படம் என்னும் எதிர்பார்ப்பும் சேர்ந்துகொண்ட இந்தப் படத்தில் முதல் முறையாக் நரைத்த தலைமுடிக்கு கறுப்பு சாயம் பூசாமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றி அதையே ஒரு ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாக மாற்றினார். முந்தைய சில படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தாலும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க சுயநலமும் பணவெறியும் நிரம்பிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருந்தார். அதில் தன்னுடைய அபாரமான ஸ்டைல். கெட்டப், நடிப்பு ஆகியவற்றால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து எதிர்மறை நாயகன் என்னும் வகைமைக்கே ஒரு ஈர்ப்பை உருவாக்கினார்.
அஜித் மட்டுமல்லாமல் நாயகி த்ரிஷா மிக அழகாகக் காட்சியளித்தார். அஜித்துக்கும் அவருக்குமான ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக அமைந்திருந்தது. நாயகனின் எதிர்த்தரப்பாக அர்ஜுனுக்கு மிகச் சிறப்பான கதாபாத்திரம் அமைந்திருந்தது. அவரும் அதைச் சரியாக உள்வாங்கி அனைவரையும் ரசிக்க வைத்தார்.
ஜெயப்பிரகாஷ். வைபவ், பிரேம்ஜி, அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அரவிந்த் ஆகாஷ், சுப்பு பஞ்சு என முதன்மைத் துணைக் கதாபாத்திரங்கள் முதல் ஒருசில காட்சிகளில் மட்டும் வந்து சென்ற கதாபாத்திரங்கள் வரை அனைவருமே ரசிக்க வைத்தனர்.
யுவனின் பாடல்கள், பின்னணி இசை, மங்காத்தா தீம் மியூசிக் என அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. சக்தி சரவணனின் ஒளிப்பதிவு, பிரவீன்-என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு, மும்பையின் பல்வேறு வண்ணங்களை திரையில் கொண்டுவந்த கலை இயக்கம் என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களும் படத்தின் ரசனைக்குரிய அம்சங்களாகின.
பரபரப்பான திரைக்கதை, நகைச்சுவையும் சுவாரஸ்யமும் நிரம்பிய காட்சிகள், நன்மையும் தீமையும் கலந்த பல வகையான கதாபாத்திரங்கள், அனைவரையும் வியக்கவைத்த கிளைமேக்ஸ் ட்விஸ்ட் என அனைத்துமே படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தன. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அஜித் என்னும் நாயகன் படத்தைத் தோளில் சுமந்து நின்றார். அவருக்காகவே அவரைக் கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட படம் இது.
பைக் ஸ்டண்ட், நீண்ட வசனம் பேசும் இடைவேளைக் காட்சி, வைபவ்வைத் துரத்தும் காட்சி, ஆண்ட்ரியாவைப் பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு அர்ஜுனுடன் போனில் பேரம் பேசும் காட்சி, இறுதி சண்டைக் காட்சி, அஜித்தும் அர்ஜுனும் கூட்டாளிகள் என்னும் ட்விஸ்ட் வெளிப்படும் இறுதிக் காட்சி, பாடல்களில் நடனம், த்ரிஷாவுடனான அழகான காதல் தருணங்கள், மது அருந்திவிட்டு தவறுகளைச் செய்வது, காதலியிடம் பொய் செல்வது, காதலியின் முன்பே அவரது தந்தையைக் கீழே தள்ளிவிட்டு தன் சுயரூபத்தை வெளிப்படுத்துவது, எதிரிகளை நக்கலாக எதிர்கொள்வது என அஜித் ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்துக் கொண்டாடிய எண்ணற்ற தருணங்கள் இந்தப் படத்தில் நிரம்பியிருந்தன. அதே நேரம் பொதுவான ரசிகர்களும் அஜித்தை மிகவும் கொண்டாடிய அவருக்காகத் திரையரங்கில் கைதட்டி விசிலடித்த படமாக அமைந்திருந்தது ‘மங்காத்தா’.
அஜித் ரசிகர்களுக்கு என்றென்றும் மறக்க முடியாத கமர்ஷியல் ட்ரீட்டாகவும் பொதுவான ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்த என்டர்டெய்னராகவும் அமைந்த ‘மங்காத்தா’ வெளியாகி பத்தாண்டுகளுக்குப் பிறகும் இனிமையான நினைவுகளை அசைபோட வைப்பதில் ஆச்சர்யமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT