Published : 31 Aug 2021 11:33 AM
Last Updated : 31 Aug 2021 11:33 AM

அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது நடவடிக்கை: சோனியா அகர்வால் எச்சரிக்கை

தன் மீது அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக நடிகை சோனியா அகர்வால் எச்சரித்துள்ளார்.

பெங்களூருவில் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டன‌ர். அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூருவில் உள்ள கன்னட நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின. இதேபோல தொழிலதிபர் பரத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசனா சின்னப்பா ஆகியோரின் வீடுகளில் நடத்திய சோதனையிலும் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஒரே பெயரைக் கொண்டிருப்பதால் ஊடகங்கள் பலவும் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் போதைப் பொருட்கள் சிக்கியதாகச் செய்திகள் வெளியிட்டன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சோனியா அகர்வால் ஊடகங்களுக்கு நேற்று (ஆக.30) விளக்கம் அளித்தார்.

''என்ன நடந்தது என்று தெரியாமலே கையில் பேப்பர், பேனா இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதிவிடுகிறார்கள். முதலில் அது யார் என்று உறுதி செய்யுங்கள். இதுபோன்று எழுதுவதற்கு முன்பாக சற்று சிந்தித்து எழுதுங்கள். பொதுவாக சமூக வலைதள வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றாலும் இது மிகவும் தீவிரமான ஒரு விஷயம். குறைந்தபட்சம் நீங்கள் என்னை அழைத்தாவது உறுதி செய்திருக்க வேண்டும்'' என்று சோனியா அகர்வால் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில், ''என் மீது அவதூறு பரப்பியதற்காவும், காலை முதல் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காவும் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன்'' என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x