Published : 27 Aug 2021 11:37 AM
Last Updated : 27 Aug 2021 11:37 AM

மற்ற மொழிகளிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்: சமந்தா பகிர்வு

பிராந்திய மொழிப் படங்களைத் தாண்டி மற்ற மொழிகளிலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சமந்தா கூறியுள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தமிழில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இறுதியாக இந்தியில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தக் கதாபாத்திரத்துக்காக மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை சமந்தா வென்றுள்ளார்.

இதுகுறித்து சமந்தா பேசியதாவது:

''கதையைத் தேர்வு செய்வதற்கான என்னுடைய அடிப்படை அளவுகோல், புதிதாக எதையாவது முயற்சி செய்ய வேண்டும் என்பதே. ‘தி பேமிலி மேன் 2’ கதை என்னிடம் சொல்லப்பட்டபோது ராஜி கதாபாத்திரம் இதுவரை நான் செய்யாத ஒன்றாகத் தோன்றியது. அதுமட்டுமின்றி கூடுதல் போனஸாக எனக்கு மிகவும் பிடித்த மனோஜுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

நான் எப்போதும் என்னுடைய வசதியான சூழலில் இருந்து வெளியே செல்ல ஒரு வாய்ப்பைத் தேடும் ஒரு நடிகை. அதுகுறித்து என்னை நானே சந்தேகம் கொள்வேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய 2-3 நாட்கள் தூக்கம் இருக்காது. என்னால் அதைச் செய்ய முடியுமா என்ற தொடர் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். நான் சந்திக்காத ஒரு கதாபாத்திரத்துக்கு என்னால் உயிர் கொடுக்க முடிகிறது என்றால் அதற்கு அந்த ஒட்டுமொத்தப் பதற்றமும் ஒரு காரணம். அதுதான் நான் ஒரு நடிகையாக வளரவும் உதவுகிறது.

இத்தொடரில் ராஜி ஒரு கெட்ட கதாபாத்திரம் இல்லை என்று நினைக்கிறேன். அவள் வரலாற்றின் தவறான பக்கத்தில் இருக்கிறாள். அவளுடைய மக்களுக்கு, அவளுடைய சமூகத்துக்கு அவள் ஒரு ஹீரோ. மனிதர்களாக நாம் பேசக் கூடாத விஷயங்களைச் செய்கிறோம், ஆனால் அவள் தன் மக்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருக்கிறாள். ஒரு காரணத்துக்காகச் சண்டையிடுகிறாள். ராஜி கதாபாத்திரத்தை இயக்குநர்கள் சிறப்பாக எழுதியுள்ளார்கள் என்றும் நினைக்கிறேன்.

இத்தொடரில் நடிக்கும்போது இது இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், தற்போது வடக்கில் இருக்கும் மக்கள் என்னுடைய நடிப்பைப் பாராட்டிப் பேசுகிறார்கள். பிராந்திய மொழிப் படங்களோடு சுருக்கிக் கொள்வதைக் காட்டிலும் மற்ற மொழிகளிலும் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன்''.

இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x