Published : 26 Aug 2021 06:30 PM
Last Updated : 26 Aug 2021 06:30 PM
'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் நடிகர் அபிஷேக் பச்சனுக்குக் காயம் ஏற்பட்டது.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும், இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும் வென்றார் பார்த்திபன். இந்தப் படத்தை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதில் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிப்பது உறுதியானது. சில வாரங்களுக்கு முன் இந்தப் படப்பிடிப்பும் ஆரம்பமானது.
இந்நிலையில் கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் நடந்த விபத்து ஒன்றில் அபிஷேக் பச்சனுக்குப் படுகாயம் ஏற்பட்டது. உடனே மும்பை விரைந்த அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக் பச்சன் பகிர்ந்துள்ளார். "கடந்த புதன்கிழமை எனது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு மோசமான விபத்தில் மாட்டிக்கொண்டேன். எனது வலது கையை உடைத்துக் கொண்டேன். அதைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. எனவே மும்பைக்கு ஒரு திடீர் பயணம். அறுவை சிகிச்சை முடிந்து எல்லாம் சரியாகிவிட்டது, கை சேர்ந்துவிட்டது. இப்போது மீண்டும் சென்னைக்குச் சென்று வேலையைத் தொடரவுள்ளேன்" என்று அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.
அபிஷேக்கின் பதிவைப் பார்த்த பல பாலிவுட் பிரபலங்கள் அவர் சீக்கிரம் முழுமையாக குணமடைய வாழ்த்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT