Published : 24 Aug 2021 10:43 AM
Last Updated : 24 Aug 2021 10:43 AM
'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' ட்ரெய்லரில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது ஸ்பைடர்மேன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே இப்படம் குறித்த தகவல்களை அதிகம் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தது படக்குழு.
நேற்று (ஆக.23) இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் அவசர அவசரமாக 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' ட்ரெய்லரை இன்று காலை வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லரின் மூலம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் முக்கிய அங்கமாக இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது.
இது தவிர ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 2004ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்’ இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்த டாக்டர் ஆக்டோபஸ் இந்த ட்ரெய்லரில் வருகிறார். ஏற்கெனவே இப்படத்தில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரம் இடம்பெறுகிறது என்ற தகவல்கள் கடந்த சில தினங்களாக உலா வந்து கொண்டிருந்தாலும் மார்வெல் நிறுவனம் அதனை உறுதி செய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ட்ரெய்லரில் டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது ஸ்பைடர்மேன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT