Published : 16 Aug 2021 01:29 PM
Last Updated : 16 Aug 2021 01:29 PM
'நவரசா' ஆந்தாலஜியில் ஊதியமின்றிப் பணிபுரிந்த திரைத்துறையினருக்குத் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆந்தாலஜி 'நவரசா'. 9 கதைகள் கொண்ட இந்த ஆந்தாலஜியை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் பங்கேற்ற அனைவருமே எந்தவொரு ஊதியமும் இல்லாமல் பணிபுரிந்துள்ளனர்.
'நவரசா' ஆந்தாலஜி மூலம் வந்த பணத்தை வைத்து, கரோனா ஊரடங்கு சமயத்தில் பணியில்லாமல் இருந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் பொருட்கள் வாங்க கார்டு முறை வழங்கப்பட்டது. இதை வைத்து சுமார் 6 மாதங்களுக்கு 12,000 பேர் பயனடைந்துள்ளனர்.
தற்போது சம்பளமின்றிப் பணிபுரிந்த அனைவருக்கும் 'நவரசா' ஆந்தாலஜியைத் தயாரித்த மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இருவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி ஒன்றுகூடி ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தம் நேரத்தையும் உழைப்பையும் நல்கி 'நவரசா'வை உருவாக்கிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.
உங்களுடைய இந்தப் பேராதரவால் ஆறு மாதங்களுக்கு நம் திரைத்துறையைச் சார்ந்த 12,000 குடும்பத்தினரின் வீட்டுத் தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதைத் தாண்டி நம் கலைக் குடும்பத்தினருக்கு நம் அன்பை அக்கறையை, நன்றியை உணர்த்த முடிந்தது. பெருமையில், நன்றியுணர்ச்சியில், மகிழ்ச்சியின் உச்சத்தில் நிற்கிறோம் நாங்கள். நீங்களும்தானே? நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சியில்லை. மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம்".
இவ்வாறு மணிரத்னம், ஜெயேந்திரா தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT