Published : 13 Aug 2021 02:19 PM
Last Updated : 13 Aug 2021 02:19 PM
1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படமே ‘ஷெர்ஷா’.
சிறு வயது முதலே ராணுவ வீரராக வேண்டும் என்று கனவில் இருப்பவர் விக்ரம் பத்ரா (சித்தார்த் மல்ஹோத்ரா). தனது 20களின் தொடக்கத்தில் ராணுவத்தில் சேரும் அவர் குறுகிய காலகட்டத்திலேயே ஒரு மிகப்பெரிய தாக்குதலை தடுத்ததால் பதவி உயர்வு பெறுகிறார். ஊரில் இருக்கும் அனைத்து மக்களையும் மாமா, அண்ணா என்று உரிமையோடு அழைத்து சகஜமாக பழகுகிறார். அவர்களில் கட்டாயப்படுத்தப்பட்டு தீவிரவாதக் குழுவில் சேர்க்கப்படும் இளைஞன் ஒருவன் கொடுத்த தகவலைக் கொண்டு அந்த தீவிரவாதக் குழுவின் தலைவன் ஹைதர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறார். அங்கு தனது சக ராணுவ வீரர்களுடன் செல்லும் விக்ரம் பத்ரா ஹைதரைக் கொல்கிறார். இந்த சம்பவம் தான் கார்கில் போருக்கு விதையாக அமைகிறது. அதன் பிறகு நடப்பதே ‘ஷெர்ஷா’.
‘பில்லா’, ‘ஆரம்பம்’ படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் முதன்முறையாக இந்தியில் அறிமுகமாகியுள்ள படம். மிக இளம் வயதிலேயே போரில் வீரமரணம் அடைந்து ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவின் பயோபிக். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இப்படம் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா?
விக்ரம் பத்ராவாக சித்தார்த் மல்ஹோத்ரா. தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் கனத்தை அறிந்து தனக்கான வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். கல்லூரி இளைஞனாக காதலில் விழும்போது, ராணுவ வீரராக ஆக்ரோஷம் காட்டும்போதும் கவர்கிறார். நாயகியாக கியாரா அத்வானி. படத்தின் வேகத்தைக் குறைப்பதைத் தவிர பெரிதாக இவருக்கு படத்தில் வேலையில்லை. நடிப்பதற்கும் பெரிதாக வாய்ப்பு இல்லை. கேப்டன் சஞ்சீவ் ஜம்வாலாக ‘லீலை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஷிவ் பண்டிட், ரகு என்ற கதாபாத்திரத்தில் வருபவர், என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை குறையின்றி செய்துள்ளனர்.
படத்தின் தொடக்கத்தில் வரும் விக்ரமின் சிறுவயது காட்சிகள், கல்லூரியில் நாயகியுடனான காதல் காட்சிகள் இவை யாவும் படத்தின் கதையுடன் சற்றும் ஒட்டவில்லை. நாயகனுக்கு சிறு வயது முதலே ராணுவ கனவு இருப்பது சரி. அதற்காக சிறு வயது முதலே வீட்டில் இருப்பவர்கள் தொடங்கி, நண்பர்கள், ஒயின் ஷாப் கடைக்காரர் என கண்ணில்படுபவர்களிடம் எல்லாம் தான் ராணுவ வீரர் ஆவேன், என் முகத்தை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது சலிக்க வைக்கிறது.
இந்த காட்சிகள் அனைத்தும் படத்தின் நேரத்தை வளர்க்க மட்டுமே பயன்பட்டுள்ளன. முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள் இது ஒரு பயோபிக் என்ற நிலையிலிருந்து சராசரி பாலிவுட் மசாலா திரைப்படம் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாயகனின் தலைமையில் ராணுவ வீரர்கள் குழு ஒரு தாக்குதலுக்கு செல்கிறது. அந்த காட்சியில் விக்ரமின் சக ராணுவ வீரர் ஒருவர் தன் 6 மாத குழந்தையின் புகைப்படத்தைக் காட்டிப் பேசும்போதே அவர் இன்னும் சில நிமிடங்களில் இறந்து விடுவார் என்பது சினிமா பார்க்கும் குழந்தைக்குக் கூட தெரிந்து விடும்.
கிட்டத்தட்ட படம் இரண்டாம் பாதியிலிருந்து தான் வேகமெடுக்கத் தொடங்குகிறது. அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை படம் பரபரக்கிறது. ‘ஷெர்ஷா’ பெயர்க்காரணம், ‘தில் மாங்கே மோர்’ போன்ற விக்ரம் பத்ரா குறித்து அனைவருக்கும் பரிச்சயமான தகவல்கள் படத்தில் சுவாரஸ்யமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் என்றால் ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம். துப்பாக்கிச் சூடு,யுத்தம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் தரத்தில் அமைப்பட்டிருக்கின்றன.
படத்தின் இறுதி 45 நிமிடங்களில் ஒளிப்பதிவாளர் கமல்ஜீத்தின் உழைப்பு அபாரம். படத்துக்கு ஜான் ஸ்டூவர்ட் எடூரியின் பின்னணி இசை பெரும்பலம். அதே போல படம் முழுவதும் காஷ்மீர், ராணுவ முகாம்கள், யுத்தக்களம் போன்று தத்ரூபமாக செட் அமைத்த கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. படத்தின் இறுதி 45 நிமிட காட்சிகளும், அதற்கேற்ற பின்னணி இசையும் பார்ப்பவர்களை உணர்ச்சிப் பிழம்பில் மிதக்கச் செய்கின்றன.
முதல் பாதியின் நீளத்தை கத்தரித்து, இரண்டாம் பாதியில் இருந்த திரைக்கதை நேர்த்தி படம் முழுவதும் இருந்திருந்தால் நாட்டுக்காக தன் இன்னுயிரை நீத்த கேப்டன் விக்ரம் பத்ராவுக்கு ஒரு முழுமையான அர்ப்பணிப்பாக கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘ஷெர்ஷா’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment