Published : 04 Aug 2021 06:45 PM
Last Updated : 04 Aug 2021 06:45 PM
’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் உலகை வைத்து ஒரு முன்கதை எழுதி அதைப் படமாகவோ, வெப் சீரிஸாகவோ எடுக்கும் எண்ணம் இருப்பதாக இயக்குநர் பா.இரஞ்சித் கூறியுள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் 'சார்பட்டா பரம்பரை'யில் காட்டப்படும் உலகில் இருக்கும் கதாபாத்திரங்கள் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் பேசியுள்ளார். அப்போது தன்னால் படத்தில் வைக்க முடியாத விஷயங்களை முன்கதையாக யோசித்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
"80களில் கதை நடப்பதைப் போல முதலில் யோசித்து வைத்திருந்தேன். அப்போது இறுதிக் காட்சியில் எம்ஜிஆர் வந்து விருது கொடுப்பது போலக் காட்சி வைத்தேன். பிறகு இந்தப் படத்தில் இருக்கும் அரசியல் நிலவரம், காலகட்டத்தால் அப்படி வைக்க விரும்பவில்லை.
ஆனால், ஒரு வெப் சீரிஸ் எடுக்கும் எண்ணம் உள்ளது. அதில் இது அனைத்தும் வரும் என்று நினைக்கிறேன். அதற்கான ஒரு கதையை இப்போது நான், தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி, பாக்கியம் சங்கர் என நால்வரும் எழுத முயன்று வருகிறோம். இது சார்பட்டாவின் முன்கதையாக இருக்கும்.
1925-ல் ஆரம்பிக்கும் அந்தக் கதையை யோசிக்கும்போதே பின்னி மில் கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து பிரமிப்பாக இருக்கிறது. இதைத் திரைப்படமாக எடுக்கும் ஆசையும் இருக்கிறது. என்ன நடக்கும் என்று பார்க்கலாம்" என்று பா.இரஞ்சித் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT