Published : 30 Jul 2021 04:27 PM
Last Updated : 30 Jul 2021 04:27 PM
காணாமல் போன தன் தோழியைக் கண்டுபிடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் எடுக்கும் முயற்சிகளே 'திட்டம் இரண்டு' படத்தின் கதை.
சென்னைக்குப் புதிதாக வருகிறார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது பேருந்தில் சுபாஷ் செல்வமைச் சந்திக்கிறார். இருவரும் நட்பாகிறார்கள். சென்னைக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முதல் வழக்கே, மர்மமான முறையில் காணாமல் போன அவருடைய நீண்ட காலத் தோழியான அனன்யாவைத் தேடுவதுதான். அவரைத் தேடும்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் என்ன, அனன்யா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா, என்பதுதான் 'திட்டம் இரண்டு' படத்தின் திரைக்கதை.
ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவருடைய நடிப்பு மற்றும் மேக்கப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராஜ சுபாஷ் செல்வம். அவருடைய நடிப்பு சில இடங்களில் சரியாக எடுபடவில்லை. ஆனாலும், ஒரு நம்பிக்கைக்குரிய அறிமுகம்தான்.
இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அனன்யா. மொத்தப் படத்தில் இவருடைய நடிப்பு மட்டும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதால் இவர் மட்டும் தனியாகத் தெரிகிறார். இப்படித்தான் இந்தக் கதாபாத்திரம் என்றாலும், இப்படி மட்டுமேதான் நடிக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. பாவல் நவகீதன் உள்ளிட்ட இதர கதாபாத்திரங்கள் கதையை நகர்த்த உதவியுள்ளன.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால், அனைத்து இடங்களும் அனைத்துக் காட்சிகளுமே ஸ்டுடியோ லைட்டிங் செட்டப் மாதிரி இருக்க வேண்டும் என ஏன் முடிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை. சதீஷ் ரகுநாதனின் பின்னணி இசை எமோஷன் காட்சிகளை ஹைலைட் பண்ணுவது போல இருந்தாலும் படத்துக்குப் பொருந்தியிருக்கிறது.
முதல் காட்சியிலிருந்து கதைக்குள் போனதற்கே இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கைப் பாராட்டலாம். அடுத்தது, வழக்கமாக ஒரு பெண் காவல்துறை அதிகாரி யோசித்தால் உடனே அவருக்கு என ஒரு மாஸ் பில்டப், ஸ்லோ மோஷனில் திரும்புவது போன்ற விஷயங்கள் இல்லாமல் அவரை ஒரு பொறுப்பான காவல்துறை அதிகாரியாகக் காட்டியது சிறப்பு.
படத்தின் தொடக்கம், அப்புறம் துப்பறிவது தொடங்கும் விதம், அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிந்துகொள்ளும் விஷயங்கள் எனப் படிப்படியாக, தெளிவாகக் கதை நகர்கிறது. ஆனால், பார்வையாளர்களை ஏமாற்ற ஒரு திருப்பம் கொடுப்போம் என்று கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அதைச் செய்துள்ளார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியே இல்லை எனச் சொல்லியிருந்தாலும் நாம் நம்பியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அவர் நினைக்கும் விஷயங்களையும், இன்னும் சில விஷயங்களையும் பல இடங்களில் வசனங்களாக வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
கதாபாத்திரம் உருவாக்கம், எமோஷன் காட்சிகள் உள்ளிட்டவை எல்லாம் குறும்படம் மாதிரிதான் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், அனன்யா இருவருக்குமான நட்பு, ஐஸ்வர்யா ராஜேஷ் - சுபாஷ் இருவருக்குமான காதல் காட்சிகள் வந்து போனாலும் அது பெரிதாக எடுபடவில்லை. ஏன் படத்தின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தின் பிரச்சினையும் ஒரு தகவலாக மட்டுமே சொல்லப்படுவதை நம்ப முடியவில்லை.
படத்தின் முக்கியமான ஹைலைட் க்ளைமாக்ஸ் காட்சி. யார், எங்கே, ஏன், எப்படி என்று விஷயங்களை நிஜமாகவே ஊகிக்க முடியாத வகையில் வைத்ததன் மூலம் கடைசி பந்தில் சிக்ஸர் இல்லை என்றாலும், ஒரு பவுண்டரி அடித்துள்ளார் இயக்குநர். ஆனால், அந்தக் காட்சிக்காக எழுதப்பட்டுள்ள முன் கதைதான் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. படத்தின் ட்ரெய்லரில் இருந்த த்ரில்லர், படத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் காணாமல் போய்விடுகிறது.
மொத்தத்தில் இந்த 'திட்டம் இரண்டு' திரைப்படம் நமது இரண்டு மணி நேரத்தை ரொம்ப வீணடிக்காத, பெரிதாக போரடிக்காத ஒரு படம். க்ளைமாக்ஸ் காட்சியில் உள்ள ட்விஸ்ட், இந்தக் கதை பேச முயற்சி செய்துள்ள முக்கியமான ஒரு விஷயம் ஆகியவற்றுக்காக இந்தப் படத்தைப் பாராட்ட வைக்கிறது. இதைச் சொல்வதற்கான திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம், நம்பகத்தன்மை என்று கவனம் செலுத்தியிருந்தால் 'திட்டம் இரண்டு' கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லியிருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT