Published : 28 Jul 2021 03:32 PM
Last Updated : 28 Jul 2021 03:32 PM
கரோனா அச்சுறுத்தலால் தொடர்ச்சியாகப் பல்வேறு படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து ஓடிடி தளங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இதனை முன்வைத்துப் பல்வேறு நிறுவனங்கள் இந்தியத் திரையுலகில் கவனம் செலுத்தி வருகின்றன.
தற்போது இந்தியாவில் கரோனா 2-வது அலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும், கேரளாவில் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. ஆந்திராவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மலையாளத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஃபகத் பாசில் நடிப்பில் உருவான 'சி யூ சூன்', 'ஜோஜி', 'மாலிக்' உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகின.
அதேபோல் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான 'த்ரிஷ்யம் 2', பிரித்விராஜ் நடிப்பில் உருவான 'கோல்ட் கேஸ்' ஆகிய படங்களும் வெளியாகின. மேலும், பிரித்விராஜ் நடித்து, தயாரித்துள்ள 'குருதி' படமும் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகக் கடந்த சில தினங்களாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், படக்குழுவினர் அமைதி காத்து வந்தனர்.
இந்நிலையில் 'குருதி' படமும் அமேசான் ப்ரைமில் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என்று பிரித்விராஜ் இன்று (ஜூலை 28) அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இப்போதைக்கு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'மரைக்காயர்' படம் திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் வெளியாகும் போது தொடர்ச்சியாக 3 வாரங்கள் ஒதுக்கத் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
This Onam, keep your friends close and frenemies closer!
Watch #KuruthiOnPrime, Aug 11. @PrimeVideoIN@PrithviOfficial @roshanmathew22 #MuraliGopy #ManuWarrier #SupriyaMenon @scriptlarva pic.twitter.com/KUcuVqbyYz
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT