Published : 27 Jul 2021 11:03 PM
Last Updated : 27 Jul 2021 11:03 PM

உரிய அனுமதி இன்றி உருவான 'தாதா 87' தெலுங்கு ரீமேக்: இயக்குநர் காட்டம்

தன்னிடம் உரிய அனுமதி பெறாமல் தனது 'தாதா 87' படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியிருப்பதாக 'தாதா 87' படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் ஸ்ரீஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு சாருஹாசன், ஜனகராஜ், பாலா சிங், மாரிமுத்து ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'தாதா 87'. இந்தப் படத்தை விஜய் ஸ்ரீஜி தயாரித்து இயக்கியிருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக், 'ஒன் பை டூ' என்கிற பெயரில், சாய்குமார் நடிக்க உருவாகியிருக்கிறது. ஆனால் விஜய் ஸ்ரீஜி, தன்னிடம் இதற்கான உரிய அனுமதியைப் பெறவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் அண்மையில் வெளியான தெலுங்கு டீஸரில், தமிழ் டீஸரிலிருந்து காட்சிகளை அப்படியே வைத்து, சாருஹாசன் வரும் காட்சிகளுக்கு பதிலாக சாய்குமாரின் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் விஜய் ஸ்ரீஜி, "கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா கலை சினிமாவுடன் இணைந்து தயாரித்த 'தாதா 87' படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி

தற்சமயம் 'பவுடர்' ,'பப்ஜி' படங்களை இயக்கி வருகிறேன். இன்று காலை YouTube நடிகர் சாய்குமார் நடிப்பில் 'ஒன் பை டூ' என்ற பெயரில் 'தாதா87' படத்தின் ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் 'காலா' டீசருடன் 'தாதா 87' படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள். அதே டீசரில் சாருஹாசன் காட்சிக்கு பதில் சாய்குமார் சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக வெளியிட்டுள்ளார்கள்.இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்

'1/2' படக்குழு என்னுடைய கற்பனையும் என் உழைப்பையும் திருடும் செயலில் இந்த சம்பவம் இருக்கிறது. என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பது வருந்தத்தக்கது

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள இனிஷியலை மாற்றுவதற்கு சமமானது என பெரியவர்கள் கூறுவார்கள்.

தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை திருட்டு நடைபெற்று வருகிறது . ந்இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக தாதா87 படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜி மீடியா கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின்படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதை பற்றி விரிவான செய்திகளை விரைவில் அறிவிப்பேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x