Last Updated : 26 Jul, 2021 05:07 PM

 

Published : 26 Jul 2021 05:07 PM
Last Updated : 26 Jul 2021 05:07 PM

'ஆதார்' படத்தை எதிர்க்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம்: இயக்குநர் கேள்வி

இந்தியில் எடுக்கப்பட்டிருக்கும் ஆதார் என்கிற திரைப்படத்துக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. படத்தில் 28 இடங்களில் வெட்ட வேண்டும் என்றும் உத்தேசித்துள்ளது. இது குறித்து படத்தின் இயக்குநர் சுமன் கோஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

முக்காபாஸ் படத்தின் மூலம் நாயகனான வினீத் குமார் சிங் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் த்ரிஷ்யம் ஃபிலிம்ஸ் இணைந்து தயரித்திருக்கும் படம் ஆதார். இந்தப் படத்தை சுமன் கோஷ் இயக்கியுள்ளார். இவர் போடோகெப் என்கிற வங்காளப் படத்துக்காக தேசிய விருதினை வென்றவர். மேலும் ஆர்க்யுமெண்டேடிவ் இண்டியன் என்கிற, நோபல்ன் பரிசு பெற்ற அமர்தியா சென் பற்றிய ஆவணப்படத்தையும் இயக்கியுள்ளார்.

2019ஆம் ஆண்டே இந்தப் படத்துக்கான தணிக்கை முடிந்து இந்த வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாகவிருந்தது. இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்ட ஆதார் அட்டையை வழங்கும் அதிகாரமுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம், படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஜனவரி மாதம் தயாரிப்பாளர்களிடம் கோரியுள்ளனர்.

படத்தைப் பார்த்த ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் படத்தில் இடம்பெற்றிருக்கும் சில வசனங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்து அவற்றை நீக்க வேண்டும் என்று 28 இடங்களில் திருத்தம் கோரியுள்ளனர். ஆனால் தனது படம் ஆதாருக்கு ஆதரவான படம் என்றும், எந்த விதமான பொய்ப் பிரச்சாரமும் படத்தில் இல்லை, பிறகு ஏன் தனது படத்தை ஆணையம் எதிர்க்கிறது என்றும் இயக்குநர் கோஷ் கேள்வியெழுப்பியுள்ளார். இது பற்றி விளக்கம் கேட்டு ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு இதுவரை பதிலும் வரவில்லையாம்.

இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் கோஷ், "படத்தின் வெளியீடு ஒத்து வைக்கப்பட்டுள்ளது, ஆணையத்தினர் படத்தில் 28 வெட்டுகள் வேண்டும் என்று கேட்டுள்ளதாக ஜியோ ஸ்டூடியோஸ் தரப்பு என்னிடம் கூறியது.

இந்தச் சூழல் எனக்கு வெறுப்பைத் தருகிறது ஏனென்றால் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அரசாங்கத்தில் சரியான நபர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கண்டிப்பாகப் பிரச்சினை இருக்காது. ஆதாருக்கு ஆதரவான படத்துக்கு ஏன் எதிர்ப்பு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான் தான் ஆதார் என்கிற வசனத்துக்கு ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இது ஆதார் திட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களாம்.

ஆதார் அட்டையால் தனியுரிமை பறிபோகுமா, நம் குளியலறையில் என்ன நடக்கிறது என்பது அரசாங்கத்துக்குத் தெரியுமா என கிராமத்தில் இருக்கும் நபர் கேள்வி கேட்பது போன்ற காட்சிக்கும் ஆணையம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இது ஃபர்ஸுவா என்கிற ஒரு தனிநபரைப் பற்றிய கதை. அவனது கிராமத்தில் முதன்முதலில் அவன் ஆதார் அட்டை பெறுகிறான். ஆனால் அவனது மனைவியின் உடல்நிலை குறித்து கிராமத்து பூசாரி குறி சொல்ல, அதனால் தனது ஆதார் எண்ணை மாற்ற எடுக்கும் கடுமையான முயற்சிகளே கதை.

ஆணையத்தினர் எதற்கெல்லாம் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை. ஜியோ ஸ்டூடியோஸ் தரப்பிலிருந்து ஆணையத்தின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள எல்லா விதமான முயற்சிகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆறு மாதங்களில் எதுவும் நடக்கவில்லை.

2017ஆம் ஆண்டு எனது ஆவணப்படத்துக்கும் தணிக்கையில் பிரச்சினை வந்தது. ஆனால் அப்போது தணிக்கைத் துறைத் தலைவராக இருந்த பிரஸூன் ஜோஷி வெளிப்படையாக என்னுடன் உரையாடினார். அவர் ஆவணப்படத்தைப் பார்த்து அதில் ஆட்சேபகரமாக எதுவுமில்லை என்றார். ஒரு வார்த்தைப் பிரயோகத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். அவ்வளவே. அவருடனான எனது அனுபவம் அற்புதமாகவே இருந்தது. ஆனால் இங்கு ஒரு முறை என் தரப்பைக் கேட்க வேண்டும், குறைந்தபட்சம் பேச வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறேன். பிரச்சினையைப் போராடித் தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதைவிட்டு விட்டு படத்தை நிறுத்துவது, யாரிடமும் பேச முடியாமல் செய்வதெல்லாம் வினோதமாக, வித்தியாசமாக இருக்கிறது" என்கிறார் கோஷ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x