Published : 22 Jul 2021 07:32 PM
Last Updated : 22 Jul 2021 07:32 PM
'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் உணர்ச்சியமான ஆக்ஷனும், தேசபக்தியும் நிறைந்த படம் என்று படத்தின் கதாசிரியரும், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாகுபலி', 'பஜ்ரங்கி பைஜான்', 'மெர்சல்' உள்ளிட்ட பல படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்தான் இந்தப் படத்துக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.
"நானும் என் மகனும் இணைந்து உருவாக்கிய கதைகள் எல்லாமே எங்கள் வீட்டில் இருக்கும் அலுவலகத்தில், காஃபி மேஜைக்கு முன் நாங்கள் உட்கார்ந்து இயல்பாகப் பேசி உருவாக்கியவைதான்.
ஆர் ஆர ஆர் இதுவரை ரசிகர்கள் திரையில் பார்க்காத ஒரு கதை. ஆக்ஷனும், தேசபக்தியும் கலந்து உணர்ச்சிகரமான படமாக இது இருக்கும். இரண்டு நட்சத்திரங்களை வைத்து ஒரு கதை எழுதுவோம் என்று என் மகன் ராஜமௌலி என்னிடம் சொன்னார்.
ஒரு நாள் இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய ஆவணக் குறிப்புகளை அவர் படித்திருக்கிறார். ஒருவர் அல்லூரி சீதாராம ராஜு, இன்னொருவர் கோமரம் பீம். அவர்கள் வாழ்வில் இரண்டு வருடங்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றியத் தகவலே இல்லை. அவர்கள் இருவரும் சந்தித்திருந்தால் என்ன ஆகிருக்கும் என்று என் மகன் அப்போது கேட்டார். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பமானாது.
படத்தின் இரண்டு நாயகர்களுக்கும், இயக்குநருக்கும் நல்ல நட்பு உள்ளது. எனவே அவர்கள் கச்சிதமாக இந்தப் படத்தில் பொருந்திவிட்டார்கள். எனவே வேறு யாரையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் மாற்று யோசிக்கவேயில்லை. இந்தப் படத்தில் இயக்குநர் செய்திருக்கும் மாயமே, ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதுதான்" என்று விஜயேந்திர பிரசாத் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT