Published : 22 Jul 2021 05:31 PM
Last Updated : 22 Jul 2021 05:31 PM
'டாணாக்காரன்' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் தமிழ் பகிர்ந்துள்ளார்.
'புலிக்குத்தி பாண்டி' படத்துக்குப் பிறகு 'டாணாக்காரன்' படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விக்ரம் பிரபு. இந்தப் படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இவர் வெற்றிமாறனிடம் 'விசாரணை', 'வடசென்னை', 'அசுரன்', 'விடுதலை' உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
'அசுரன்' படத்தின் இடைவேளை சண்டைக்காட்சியில் தனுஷுடன் சண்டையிடும் நபர்களில் ஒருவர் தமிழ் என்பது நினைவுகூரத்தக்கது.
'டாணாக்காரன்' படத்தில் விக்ரம் பிரபுவுக்கு நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது 'டாணாக்காரன்'.
இந்தப் படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் தமிழ் கூறியிருப்பதாவது:
"போலீஸ் பயிற்சியில் உள்ள வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. கல்லூரி மாணவர்களுக்கு நிகராக போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்களின் வாழ்க்கையிலும் பல சுவாரசியங்கள் உண்டு. வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படம் இருக்கும்.
எனக்கு ஏராளமான போலீஸ் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்த அனுபவங்களை சினிமாவுக்காக சில மாற்றங்கள் செய்து அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படியான பொழுதுபோக்குப் படமாக உருவாக்கியுள்ளேன்.
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான உழைப்பைக் கொடுத்து நடித்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படம் அவரின் சினிமா கரியரில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேலூர் மாவட்டத்தில் ஒரே கட்டமாக நடத்தி முடித்தோம். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளும் முடிவடைந்துள்ளதால் படத்தை விரைவில் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்".
இவ்வாறு இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டாணாக்காரன்' டீஸருக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT