Published : 14 Jul 2021 11:26 AM
Last Updated : 14 Jul 2021 11:26 AM
தன் சினிமா வாழ்க்கையிலிருந்து தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
தெலுங்கில் அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘குடி யடமைத்தே’. ராம் விக்னேஷ் இயக்கியுள்ள இத்தொடரில் அமலாபால் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் ஈஸ்வர் ரச்சிராஜு, ப்ரதீப் ருத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்தொடர் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் குறித்தும் தனது 12 ஆண்டுகால திரைப் பயணம் குறித்தும் அமலாபால் பகிர்ந்துள்ளார்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
''நான் நானாக இருக்கிறேன். எனக்கு 17 வயது இருக்கும்போது திரைத்துறைக்குள் வந்தேன். என் தனிப்பட்ட வாழ்வில் நான் கடந்துவந்த விஷயங்கள் அனைத்தும் என் திரை வாழ்விலும் பிரதிபலித்து வந்துள்ளன. அதேபோல சினிமா வாழ்வில் சந்தித்த விஷயங்கள் என் சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன. அவை இரண்டையும் பிரிக்கும் கலை எனக்குத் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டு வரை இதை என்னிடம் நானே சொல்லி வந்தேன்.
ஆனால், 2020ஆம் ஆண்டு என் கண்ணைத் திறந்தது. என் அப்பாவின் மரணத்தை நான் எதிர்கொண்டபோது, அது எனக்கு உண்மையில் ஒரு சுயபரிசோதனை காலகட்டமாகவே இருந்தது. அப்போது நான் ஒரு திறந்த புத்தகமாக உணர்ந்தேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை என்று உணர்ந்தேன். நான் செய்த விஷயங்களைத் தாண்டி என் வாழ்க்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதைப் போல உணர்ந்தேன்.
தற்போது என் சினிமா வாழ்க்கையிலிருந்து என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அந்தக் கலையைத்தான் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்''.
இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT