Published : 13 Jul 2021 02:00 PM
Last Updated : 13 Jul 2021 02:00 PM
தயாரிப்பாளர் சங்கங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக வெளியான செய்திக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் இணைந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடங்கினார்கள். இதன் தலைவராக பாரதிராஜா இருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு, தியாகராஜன், லலித்குமார், சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் உள்ளிட்ட முன்னணித் தயாரிப்பாளர்கள் அனைவருமே தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த அணி பொறுப்புக்கு வந்ததிலிருந்து, தமிழ்த் திரைப்பட நட்ப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை அவரது தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை
இதனிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து பணிபுரியவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தம் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"இந்தச் செய்தி தவறானது. எங்கள் உறுப்பினர்களின் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து சுயாதீன இயக்கமாகவே இயங்கவுள்ளோம். ஒட்டுமொத்தத் தமிழ் சினிமா துறை விவகாரங்களில் கூட்டமைப்புடனும், தயாரிப்பாளர் சங்கத்துடனும் இணைந்து பணியாற்றுவோம். ஆனால் நாங்கள் சுயாதீன இயக்கமாகவே இருப்போம்".
இவ்வாறு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT