Published : 06 Jul 2021 08:16 PM
Last Updated : 06 Jul 2021 08:16 PM

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டாவது திரையரங்கை வாங்கிய இயக்குநர் டாரன்டீனோ

இயக்குநர் க்வெண்டின் டாரன்டீனோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் விஸ்டா தியேட்டரை விலைக்கு வாங்கியுள்ளார். இது அவர் வாங்கும் இரண்டாவது திரையரங்கம்.

2007ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்த நியூ பெவர்லீ என்கிற பழமையான, பிரபலமான திரையரங்கை டாரன்டீனோ விலைக்கு வாங்கினார். இந்த அரங்கம் 35 எம் எம், 16 எம் எம் ஃபிலிமில் திரைப்படங்களைத் திரையடுவதற்காக மட்டுமே டாரன்டீனோ வைத்திருக்கிறார். கரோனா நெருக்கடி முடிந்து கடந்த ஜூன் மாதம் இந்தத் திரையரங்கம் மீண்டும் திறக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு நாள் இரவுக் காட்சியிலும் அரங்கு நிறைந்து வருகிறது.

இந்நிலையில், 1923ஆம் ஆண்டு மற்றொரு பழம்பெருமை கொண்ட விஸ்டா தியேட்டரை டாரன்டீனோ விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து பாட்காஸ்ட் பேட்டி ஒன்றில் டாரன்டீனோ தெரிவித்துள்ளார்.

"கிறிஸ்துமஸ் சமயத்தில் அரங்கைத் திறக்க திட்டமிட்டுள்ளோம். கலைப் படங்கள், குறிப்பிட்ட சில படங்களை மட்டும் திரையிடும் அரங்காக இது இருக்காது. புதிய திரைப்படங்களையும் திரையிடுவோம். எங்களுக்கு ஃபிலிம் பிரதியைத் தரவேண்டும் அவ்வளவே. நியூ பெவர்லியைப் போல இது செயல்படாது. அந்த அரங்குக்கென தனித்தன்மை உண்டு. விஸ்டாவில் நாங்கள் பழைய படங்களும் திரையிடுவோம்" என்று டாரன்டீனோ பேசியுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக கரோனா நெருக்கடி தீவிரமாகத் திரைத்துறையை பாதித்து வரும் நிலையில் சில திரையரங்கச் சங்கிலிகளும் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசியிருக்கும் டாரன்டீனோ, "எனக்கு எந்தத் திரையரங்கும் மூடப்படுவது பிடிக்காது. ஆனால், தற்போது மூடப்பட்டிருக்கும் சில திரையரங்குகள் எல்லாம் மூடத் தகுதியானவைதான். அவர்கள் திரைப்படங்களுக்கென இருக்கும் விசேஷத் தன்மையை மழுங்கடித்துவிட்டார்கள். எப்போதும் விளம்பரங்களைத் திரையிட்டு, விளக்குகளை அணைக்காமல், மைதானத்தில் இருக்கும் இருக்கைகளைப் போன்ற அமைப்பு, பிளாஸ்டிக் இருக்கைகள் என மோசமாக இருந்தன.

எனவே, அவர்கள் முடிவை அவர்களே நீண்டகாலமாக எழுதி வருகின்றனர். ஆனால், வியாபாரம் எப்படியோ தங்களைக் காப்பாற்றிவிடும் என்று கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒரு முறையும், திரைப்படம் பார்க்கும் அனுபவம் என்பது பார்வையாளருக்கு எப்படித் தரம் குறைந்து வருகிறது என்பதை நான் பார்த்து வருகிறேன். ஆனால் சிறிய, ரசிகர்களுக்குத் தனிப்பட்ட அனுபவத்தைத் தரும் சொகுசுத் திரையரங்குகள் இந்தக் காலகட்டத்தில் செழிக்கும் என்று நினைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x