Published : 22 Jun 2021 01:44 PM
Last Updated : 22 Jun 2021 01:44 PM
பல கோடி ரூபாய் செலவில் உருவான மோகன்லாலின் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
கேரளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரளத் திரையரங்க உரிமையாளர் சங்கம் என இரு தரப்புக்கும் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆகஸ்ட் 12ஆம் தேதி, 600 திரைகளில் இந்தப் படம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் மட்டும் ஓடும். கரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரையுலகை மீட்டெடுக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ஒரு பிரம்மாண்டமான படத்தைப் பார்க்க ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் ’மரைக்காயர்’ திரைப்படம் ஓடும் 3 வாரங்களுக்கு வேறெந்த திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில் இன்னும் கரோனா நெருக்கடி நிலவுவதால் உடனடியாகத் திரையரங்குகளைத் திறக்கச் சொல்லி அரசை நிர்பந்திக்க மாட்டோம் என்றும் இந்தச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
2019ஆம் ஆண்டு ’மரைக்காயர்’ படத்துக்கான தணிக்கை முடிந்தது. கடந்த வருடம் மார்ச் மாதமே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட்டன. வெளியீடும் தள்ளிப்போனது. இவ்வளவு பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இரண்டு வருடங்கள் தாமதமாக வெளியாகும் படத்துக்குப் போட்டியாக வேறெந்தப் படமும் வெளியாகாமல், இது தனியாக ஓடுவது நியாயமே என்று தயாரிப்பாளர் தரப்பு கருதுகிறது.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’மரைக்காயர்’ படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 2020க்கான தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் என 3 தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT