Last Updated : 17 Jun, 2021 02:55 PM

 

Published : 17 Jun 2021 02:55 PM
Last Updated : 17 Jun 2021 02:55 PM

பெண் என்பதால் போதைமருந்து வழக்கில் குறிவைக்கப்பட்டேன்: நடிகை ராகினி

கன்னடத் திரையுலகில் போதை மருந்து சர்ச்சை வெடித்து தொடர்ந்து நடந்த கைதுப் படலத்தில் சிறை சென்று ஜாமீனில் திரும்பிய நடிகை ராகினி த்விவேதி, தான் ஒரு பெண் என்பதால் இந்த வழக்கில் குறிவைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

கர்நாடகா விஜயபுரா பகுதியில் திருநங்கைகளுக்கான ரத்த தானம் மற்றும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற ராகினி, போதை மருந்து வழக்குத் தொடர்பாக முதல் முறையாகப் பேட்டியளித்துள்ளார்.

"நம் சமூகத்தில் பொதுவாக பெண்களைத்தான் எளிதில் குறிவைக்க முடியும். என் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லா பெண்களுக்குமே இது நடக்கிறது. அதுவும் ஒரு பெண் வெற்றிகரமாக இருந்தால் அது இன்னும் அதிகமாகிறது, மோசமாகிறது.

என் விஷயத்தில் எல்லோருமே என்னைக் குறிவைத்து, எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் பகிர்ந்து ட்ரெண்ட் செய்தார்கள். ஆனால், எனக்கு அவர்களைப் பற்றி யார் என்னவென்று தெரியாத நிலையில், அவர்கள் என்னைப் பற்றி என்ன எழுதினால், பேசினால் எனக்கென்ன? நான் ஏன் அதுகுறித்து கவலைப்பட வேண்டும்?

இன்னும் என் நடிப்புக்காக என்னை விரும்புகிறார்கள். தொடர்ந்து எனக்கு உத்வேகம் தரும், என் வாழ்க்கையின் மோசமான கட்டத்தை மறக்கடிக்கச் செய்யும் ரசிகர்கள் உள்ளனர்" என்று ராகினி பேசியுள்ளார்.

கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 180 சாட்சியங்களை விசாரித்த பிறகு, 2400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை இந்த வருடம் மார்ச் மாதம் அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். இதில் ராகினி, சஞ்சனா உட்பட 25 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x