Published : 11 Jun 2021 05:43 PM
Last Updated : 11 Jun 2021 05:43 PM
தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது தொடர்பாக காவல்துறையில் சார்லி புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் அவ்வப்போது, தமிழ் திரையுலக பிரபலங்களின் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட பிரபலங்கள் தரப்பிலிருந்து உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்படும். சமீபமாக காமெடி நடிகர்கள் பெயரில் பலரும் போலி ட்விட்டர் கணக்குகளைத் தொடங்கி வருகிறார்கள்.
கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ் உள்ளிட்டோர் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் தொடங்கியிருந்தார்கள். அதற்கு அவர்கள் அனைவருமே இது போலியானது என மறுப்பு தெரிவித்திருந்தார்கள். அந்த வரிசையில் இப்போது சார்லியும் இணைகிறார்.
சார்லியில் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் "இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்ற பதிவு வெளியாகியிருந்தது. இதை வைத்து பலரும் சார்லியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர தொடங்கினார்கள்.
தற்போது இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார் சார்லி. இது தொடர்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் சார்லி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
"கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிவரும் நான் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி இன்று (ஜூன் 11) போலி ட்விட்டர் கணக்கு (https://twitter.com/ActorCharle) துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு சார்லி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT