Published : 10 Jun 2021 06:15 PM
Last Updated : 10 Jun 2021 06:15 PM
கரோனா நெருக்கடி, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் 400 பழங்குடியினக் குடும்பங்களுக்கு நடிகர் ராணா டகுபதி உதவி செய்துள்ளார்.
கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதால் தேசிய அளவில் பல நிலைகளில் ஊரடங்கு தொடர்கிறது. இதனால் தினக்கூலிப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் பலர் வாடுகின்றனர். திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பண உதவி, பொருளுதவி, மருத்துவ உதவி எனச் செய்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, நிர்மல் மாவட்டத்தில் இருக்கும் பழங்குடியின மக்களைத் தேடிச் சென்று உதவியுள்ளார். இந்தத் தொற்றுக் காலத்தில் அடிப்படைத் தேவைகளுக்குக் கூடத் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் மளிகைப் பொருட்களையும், மருந்துகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார் ராணா.
அல்லாம்பள்ளி மற்றும் பாபா நாயக் ரண்டாக்ரம் பஞ்சாயத்து, குர்ரம் மதிரா, பாலாரேகடி, அட்டால திம்மாபூர் உள்ளிட்ட 9 பகுதிகளுக்கு ராணாவின் உதவி சென்று சேர்ந்துள்ளது. கடந்த வருடம் கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திரைத்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு ராணா ரூ.1 கோடி நன்கொடை அளித்தார்.
ராணா நடிப்பில் 'விராட பருவம்' திரைப்படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து 'அய்யப்பனும் கோஷியும்' மலையாளப் படத்தின் அதிகாரபூர்வ தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT