Published : 10 Jun 2021 12:38 PM
Last Updated : 10 Jun 2021 12:38 PM
5ஜி தொழில்நுட்பம் தொடர்பான வழக்கு குறித்து ஜூஹி சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கைக் காணொலி மூலம் விசாரித்த நீதிபதி, இது விளம்பரத்துக்காகத் தொடர்ந்த வழக்கு எனத் தள்ளுபடி செய்து, நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று (09.06.21) ஜூஹி சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கடந்த சில நாட்களாக ஏகப்பட்ட இரைச்சல்கள் இருந்து வந்தன. அதில் நான் பேசுவதுகூட எனக்கே கேட்காமல் இருந்தது. அந்த இரைச்சலுக்கு நடுவே ஒரு முக்கியமான விஷயம் தொலைந்துபோய் விட்டதாகக் கருதுகிறேன். அது நாங்கள் 5ஜி தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்பது. சொல்லப்போனால் நாங்கள் அதை வரவேற்கிறோம். தயவுசெய்து அதைக் கொண்டுவாருங்கள்.
நாங்கள் கேட்பதெல்லாம் 5ஜி தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்று அதிகாரிகள் உத்தரவாதம் தரவேண்டும் என்பதைத்தான். அதற்கு உத்தரவாதம் கொடுத்து அதைப் பொதுவெளியில் வெளியிட்டால் எங்களுடைய பயம் விலகும். அது குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், கருவிலிருக்கும் சிசுக்கள், முதியவர்கள், தாவரங்கள் விலங்குகள் என அனைவருக்கும் பாதுகாப்பானதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறோம்''.
இவ்வாறு ஜூஹி சாவ்லா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT