'பிரேமம்' கிளைமாக்ஸ்: மலர் டீச்சர் பின்னணி குறித்து அல்போன்ஸ் புத்திரன் பகிர்வு

'பிரேமம்' கிளைமாக்ஸ்: மலர் டீச்சர் பின்னணி குறித்து அல்போன்ஸ் புத்திரன் பகிர்வு

Published on

'பிரேமம்' கிளைமாக்ஸில், மலர் டீச்சர் பின்னணி குறித்துப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

அதிலும், இந்தப் படத்துக்குப் பிறகு இப்போது வரை பலரும் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்றே அழைத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது. நேற்று (ஜூன் 4) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.

அப்போது மலர் டீச்சர் கதாபாத்திரம் குறித்து ரசிகர் ஒருவர், "ஒரு சந்தேகம், ‘பிரேமம்’ படத்தில் ஜார்ஜிடம் எதையும் சொல்ல விரும்பவில்லை என்று மலர் கடைசியில் சொல்கிறாள். மூன்று முறை படத்தைப் பார்த்த பின்பும் எனக்கு இது குழப்பமாக இருக்கிறது. அவருக்கு உண்மையில் பழைய விஷயங்கள் மறந்துவிட்டனவா? அல்லது வேண்டுமென்றே ஜார்ஜைப் புறக்கணிக்கிறாரா? அல்லது நினைவுகளை மீண்டும் பெற்று, ஜார்ஜுக்குத் திருமணம் ஆகிறது என்பதால் எதையும் சொல்லாமல் இருக்கிறாரா? உங்கள் பதிலுக்காக என் நண்பனுடன் 100 ரூபாய் பந்தயம் வைத்திருக்கிறேன்" என்று அல்போன்ஸ் புத்திரனிடம் கேள்வி எழுப்பினார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:

"அவளுக்கு அனைத்தும் மறந்துவிட்டது. அவளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தபோது அவள் அறிவழகனிடம் பேசியிருக்கலாம். அங்கு செல்லும்போது ஜார்ஜ், செலினோடு மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறாள். ஆனால், அவளுக்கு நினைவு திரும்பியிருப்பது ஜார்ஜுக்குத் தெரியும். இதை வசனங்களில் நாங்கள் சொல்லவில்லை. சைகையிலும், இசையிலும் காட்டியிருப்போம். உங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் சொன்னதுபோல அவளுக்குச் சமீபத்தில் நினைவு திரும்பிவிட்டது, ஆனால், ஜார்ஜுக்குத் திருமணம் என்பதால் அவள் அதைச் சொல்லவில்லை என்பதே சரி".

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in