Published : 04 Jun 2021 02:43 PM
Last Updated : 04 Jun 2021 02:43 PM
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாள் இன்று (ஜூன் 4). கோடான கோடி இசை ரசிகர்களின் மனங்களிலிருந்து நீங்கவே முடியாத அந்தப் பெரும் பாடகன் இந்த மண்ணுலகை விட்டு நீங்கிய பிறகு வரும் முதல் பிறந்த நாள் இது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் எஸ்பிபி மரணமடைந்தபோது இந்தியத் திரையுலகும் இசையுலகும் ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்ணீர்க் கடலில் ஆழ்ந்தனர். அவரை எத்தனை எத்தனை மனங்கள் தங்களுடைய வீட்டில் ஒருவராக நேசித்தன என்பதை அவர் மறைந்த பிறகு இன்னும் துலக்கமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.
1969இல் தமிழ்த் திரைப்படத்தில் எஸ்பிபி பாடிய முதல் பாடல் வெளியானது. தமிழ், கன்னடம். தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 16 இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி. இன்னும் திரைக்கு வராத 'அண்ணாத்தே', 'தமிழரசன்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
60ஸ் கிட்ஸ் தொடங்கி புத்தாயிரத்தில் பிறந்த 2கே கிட்ஸ் ஏன் இன்று பதின்பருவத்தில் இருக்கும் 2.1கே கிட்ஸ் (2010களில் தம் சிறார் பருவத்தைக் கழித்தவர்கள்) வரை அவரைத் தம்முடைய மனம் கவர்ந்த பாடகர்களில் முதன்மையானவராகக் கருதுகிறார்கள். காதல், பாசம், அன்பு, நட்பு, பரிவு, ஏக்கம், கவலை, துக்கம், அழுகை, கோபம், ஆவேசம், வீரம், சாகசம் என அவர் குரல் வழியே வெளிப்பட்ட மனித உணர்ச்சிகள் அத்தனையும் மிகச் சிறந்த ஆண் குரல் வடிவங்களைப் பெற்றன. தமிழ்ப் பெண்களுக்கு மிகப் பிடித்தமான ஆண் குரலாகவும் அவருடைய குரலே இருந்தது.
கே.வி.மகாதேவன். எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற இசை மேதைகளால் பட்டை தீட்டப்பட்டவர், தமிழ் சினிமா இசையுலகின் முடிசூடா மன்னனாக இளையராஜா ஆண்டுவந்த காலகட்டமான 1980களில் புகழின் உச்சத்தை அடைந்தார். ரஹ்மான் என்னும் புயல் இசைச்சூழலை ஆக்கிரமித்த 90களிலும் அவருடைய புகழ்க்கொடி பட்டொளி வீசிப் பறந்தது. உலகமயமாக்கலுக்குப் பிந்தைய காலத்திலும் இசையமைப்பும் பாடல்களைப் பதிவு செய்வதும் டிஜிட்டல் மயமாகிவிட்ட காலத்திலும்கூட எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் எஸ்பிபியின் குரலுக்கான முக்கியத்துவம் குறையவேயில்லை. கடைசிவரை அவருடைய குரலில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. தொடக்கம் முதல் இறுதிவரை அதே உற்சாகத்துடனும் உயிரோட்டத்துடனும் பாடல்களைப் பாடிய பாடகராகத் திகழ்ந்தார் எஸ்பிபி.
1997இல் வெளியான 'மின்சார கனவு' திரைப்படத்தில் 'தங்கத் தாமரை மகளே' என்னும் பாடலைப் பாடியதற்காகத் தேசிய விருதை வென்றார் எஸ்பிபி. அதுவே தமிழ்ப் பாடலுக்காக அவர் பெற்ற முதல் தேசிய விருது. பாடத் தொடங்கி முப்பதாண்டு நெருக்கத்தில் ஒரு மொழியில் முதல் தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். அவர் எப்படி எல்லாக் காலத்திலும் புத்துணர்வுடன் இயங்கிவந்தார் என்பதும் அவருடைய கலை வெளிப்பாட்டு எப்போதும் உன்னத நிலையில் இருந்தது என்பதையும் புரிந்துகொள்ள இதுவே சிறந்த சான்று.
ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட அவருடைய திரைவாழ்வில் முதல் இருபத்தைந்து ஆண்டுகளைப் போலவே அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளும் சிறப்பானதாகவே அமைந்தன. தமிழில் மட்டும் கணக்கெடுத்தால்கூட இரண்டாம் பாதி காலகட்டத்தில் அவர் பாடிய எண்ணற்ற பாடல்கள் சாகாவரம் பெற்றவை. இளையராஜா, ரஹ்மான், தேவா, வித்யாசாகர், மணி ஷர்மா, பரத்வாஜ், சிற்பி, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ், அனிருத் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் தொடர்ந்து பணியாற்றினார்.
இளம் இசையமைப்பாளர்கள் தாம் இசையமைத்த பாடல்களை எஸ்பிபி பாடுவதை தமக்கான பாக்கியமாகவும் பெருமையாகவும் கருதினர். 'முன்பனியா முதல் மழையா' (நந்தா'), 'உனைப் பார்த்த பின்பு நான்' (காதல் மன்னன்), 'மெளனமே பார்வையாய்' (அன்பே சிவம்), 'அழகூரில் பூத்தவளே' (திருமலை), 'நான் போகிறேன் மேலே மேலே' (நாணயம்), 'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி' (ஆடுகளம்), 'புதிய மனிதா' (எந்திரன்), 'மரண மாஸ்' (பேட்ட), 'சும்மா கிழி' ('தர்பார்') எனப் பல வகைமைகளைச் சேர்ந்த பல உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்திய பாடல்கள் ரசிகர்கள் மனங்களிலிருந்து என்றும் நீங்காது.
90களுக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களில் அறிமுகப் பாடலைத் தொடர்ந்து பாடியவர் கமல்ஹாசனுக்கும் நிறைய பாடல்களைப் பாடினார். கமல்ஹாசனின் தெலுங்கு மொழிமாற்றப் படங்களில் வசனங்களுக்கும் கமலுக்குப் பின்னணி குரல் கொடுத்தார். 'தசாவதாரம்' திரைப்படத்தில் கமல் தமிழில் பேசிய எண்ணற்ற குரல்களை அதே மாதிரி தெலுங்கிலும் கொண்டுவந்த அசாத்திய சாதனையாளர் எஸ்பிபி.
பாடகராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் எஸ்பிபி எல்லா வயதினரையும் கவர்ந்தவர். 'கேளடி கண்மணி' படத்தில் கதையின் நாயகனாகவும் 'திருடா திருடா'வில் புத்திசாலித்தனம் மிக்க காவல்துறை அதிகாரியாகவும் 'பிரியமானவளே' படத்தில் விஜய்யின் அன்புமிக்க அப்பாவாகவும் பலவிதமான கதாபாத்திரங்களில் மிகையற்ற நடித்த எஸ்பிபியின் தோற்றமும் உடல்மொழியும்கூட ரசிகர்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதராகவும் எஸ்பிபி அனைவருக்கும் மிகப் பிடித்தவராகவே இருந்தார். அவ்வளவு பெரிய சாதனைகளை நிகழ்த்திய கணக்கிலடங்கா விருதுகளைக் குவித்து, நெடுங்காலமாக இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணிப் பாடகராக இருந்த ஒருவர் பொது நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் ரசிகர்களைச் சந்திக்கும்போதுகூட தன்னைக் கனிவான அன்புமிக்க மனிதராகவே நடந்துகொண்டார். அவரிடமிருந்து துளியும் தலைக்கனமோ அகம்பாவமோ பொறாமையோ வெளிப்பட்டதில்லை. தனது சக கலைஞர்களை மனதாரப் பாராட்டுவதிலும் இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும் அவருக்கு இணையாக யாரையும் சொல்லிவிட முடியாது. இதுபோன்ற பண்புகளால் மக்களின் மனதுக்கு மிக நெருக்கமான மக்களின் பேரன்பைப் பெற்ற ஆளுமையாகத் திகழ்ந்தார் எஸ்பிபி.
குரலாலும் நடிப்பாலும் பண்புகளாலும் கோடிக் கணக்கான மனிதர்களைக் கவர்ந்த எஸ்பிபி தன் பாடல்களாலும் நடித்த திரைப்படங்களாலும் மட்டுமல்லாமல் பெருமதிப்புக்குரிய மனிதராகவும் என்றென்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT