Published : 04 Jun 2021 11:31 AM
Last Updated : 04 Jun 2021 11:31 AM
மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்தப் படங்களை உருவாக்கும் இயக்குநர்கள், திரை எழுத்தாளர்களையும் முதல்வர் கௌரவிக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் நேற்று (ஜூன் 3) விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டுப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின். அதில் எழுத்தாளர்களுக்கு இரண்டு முக்கிய திட்டங்கள் அடங்கும்.
முதல் திட்டமாகத் தமிழ் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும். இரண்டாவது திட்டமாக, உயர் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
இந்த திட்டங்கள் எழுத்தாளர்கள் வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதேபோன்று திரை எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று இயக்குநர் சேரன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது:
"திட்டங்கள் சிறப்பு சார். எழுத்தாளர்களை கௌரவிப்பது பாராட்டுக்குரியது. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்தப் படங்களை உருவாக்கும் இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்தப் பதிவை இடுகிறேன்.
விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச் சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை. அதைக் கவனத்தில் கொண்டு இதைப் பாருங்கள்.
மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் நிறையப் பேர் வாழ்வியல் பிரச்சினைகளில் இருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் சிறந்தவர்களைக் கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கௌரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்”.
இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT