Published : 30 May 2021 02:48 PM
Last Updated : 30 May 2021 02:48 PM

கரோனா 2-ம் அலை: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்

சென்னை

கரோனா 2-வது அலையின் தீவிரத்தை முன்வைத்து, ரசிகர்களுக்கு ஆடியோ பதிவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மேலும், பிரபலங்கள் பலரும் தங்களுடைய குடும்பத்தினருடன் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே, ரசிகர்களைப் பத்திரமாக இருக்குமாறும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"என்னுடைய ரசிகர்களான தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருடன் தனித்தனியாகப் பேச முடியவில்லை. அதனாலேயே இந்த ஆடியோ பதிவு. அனைவரும் பத்திரமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். தயவுசெய்து ஏதேனும் அவசரமான விஷயத்துக்காக மட்டுமே நீங்கள் வெளியே போக வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

எப்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். இரட்டை முகக்கவசம் போடச் சொல்கிறார்கள். அதையும் அணியுங்கள். நிறையப் பேர் முகக்கவசத்தைச் சரியாக அணிந்து கரோனாவிலிருந்து தப்பித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்குத் தடுப்பூசி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்துப் போட்டுக் கொள்ளுங்கள். நான் போட்டுக் கொண்டேன்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை ரொம்பவே கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களையும் வெளியே போகவிடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமான வேலை ஏதேனும் இருந்தால், அதற்கு மட்டும் வெளியே சென்றுவிட்டு, உடனே வீட்டிற்குத் திரும்பிவிடுங்கள்.

ரொம்ப பத்திரமாக இருந்துவிட்டோம் என்றால், இந்த கரோனா அலை சீக்கிரமாக முடிந்துவிடும். அனைவரும் அவர்களுடைய வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடலாம். அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். நீங்கள் முக்கியமாக உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நிறையக் கேள்விப்படுகிறோம். கரோனா பாதிப்பு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது என்று கேள்விப்படுகிறேன்.

நீங்கள் பத்திரமாக இருந்தீர்கள் என்றாலே, இது பெரிய பிரச்சினையே இல்லை. சீக்கிரமே அனைத்தும் சரியாகிவிடும். படம் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நானும் பத்திரமாக இருக்கிறேன். வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறோம். உங்களுடைய அன்பு, ஆதரவு அனைத்தையும் சமூக வலைதளம் மற்றும் இதர வழிகளிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். லவ் யூ ஆல். பத்திரமாக இருங்கள்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

— All India SKFC ᴰᵒᶜᵗᵒʳ (@AllIndiaSKFC) May 30, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x