Published : 29 May 2021 05:41 PM
Last Updated : 29 May 2021 05:41 PM
கரோனா தடுப்பூசி தொடர்பாகப் பொதுமக்களுக்கு சத்யராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரி கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாகவே உள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தப் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியமாக இருக்கிறார்கள். இதனால் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தடுப்பூசி தொடர்பாக சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"சமீபமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். யாருமே சரியாகத் தடுப்பூசிப் போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள். அது எப்படி?.
மருத்துவத்துக்குப் படித்தவர்கள்தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனாலும், நம்மை விட மருத்துவர்களுக்கு நமது உடம்பைப் பற்றி நன்றாகத் தெரியும். அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்குப் படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூடக் கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?
சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையைத் தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையைச் சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும் செய்கிறார்கள். ஆனால், இந்தத் தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்".
இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT