Published : 27 May 2021 12:32 PM
Last Updated : 27 May 2021 12:32 PM
கரோனா நெருக்கடியால் வருமானமின்றி பாதிக்கப்பட்டிருக்கும் 3600 நடனக் கலைஞர்களுக்கு நடிகர் அக்ஷய் குமார் ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள் கொடுத்து உதவி செய்யவிருக்கிறார்.
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலா இந்தியா முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் வருமானமின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லாததால் திரைத்துறையிலும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர் நடிகையர் என்று பலரும் அவர்களுக்கு அவ்வபோது உதவி வருகின்றனர்.
கடந்த வருடம் முதலே திரைத்துறையைச் சேர்ந்த தினக்கூலி பணியாளர்களுக்கு பலவிதமான உதவிகளைச் செய்து வரும் நடிகர் அக்ஷய் குமார் தற்போது நடனக் கலைஞர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். கணேஷ் ஆச்சார்யா என்கிற அறக்கட்டளை மூலமாக இந்த உதவியை அவர் செய்யவிருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த கணேஷ் ஆச்சார்யா என்பவர் நடத்தி வரும் இந்த அறக்கட்டளையில் யாரெல்லாம் பதிவு செய்திருக்கிறார்களோ அந்த நடனக்ல் கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை அக்ஷய் குமார் வழங்கவிருக்கிறார்.
இது குறித்து பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் ஆச்சார்யா, "எனது பிறந்தநாள் அன்று என்னை அழைத்து அக்ஷய் குமார் வாழ்த்தினார். பிறந்தநாள் பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார். கஷ்டப்படும் நடனக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டேன். இதற்கு அவர் உடனே சம்மதித்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.
அக்ஷய் குமார் கடந்த ஏப்ரல் மாதம் கவுதம் காம்பீரின் அறக்கட்டளைக்கு ரூ 1 கோடி நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷய் குமாரும் ட்விங்கிள் கண்ணாவும் 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் வழங்கியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT