Last Updated : 26 May, 2021 12:48 PM

 

Published : 26 May 2021 12:48 PM
Last Updated : 26 May 2021 12:48 PM

ஓடிடி பார்வை: போர்கன், நெட்ஃபிளிக்ஸ்

அரசியலை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளில் ஆகச் சிறந்தது என, 2010இல் டென்மார்க்கில் வெளியான இந்தத் தொடர் கருதப்படுகிறது. மூன்று பாகங்கள், ஒவ்வொரு பாகத்துக்கும் 10 தொடர்கள் என, 30 மணி நேரத்துக்கு மேல் நீளும் இந்தத் தொடர், அரசியலை, அதன் அத்தனை நிறை, குறைகளுடன் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

அரசியலைப் பொறுத்தவரை, எல்லா நாடுகளிலும் வலது, இடது என்று இரண்டு எதிரெதிர் கருத்தியல்கள் உள்ளன. அந்தக் கருத்தியல்களுக்கு இடையில் நிகழும் மோதல்களின் அடிப்படையில்தான், உலகெங்கும் அரசியல் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியையும் சமூக மேன்மையையும் வளர்த்தெடுக்கப் பயன்பட்ட அந்த முன்னெடுப்பு, இன்று வன்மமும் விரோதமும் வெறுப்பும் நிரம்பி வழிந்து பொறுப்புணர்ச்சியை வளர்த்தெடுத்து, நாட்டின் சீரழிவுக்கும் சமூகக் கீழ்மைக்கும் எப்படிக் காரணமானதாக உள்ளது என்பதைத் தெள்ளத் தெளிவாக இந்தத் தொடர் விவரிக்கிறது.

எல்லா நாடுகளிலும், வலது, இடது என்ற எதிரெதிர் துருவங்களுக்கு இடையிலிருக்கும் மையமாக விளங்கும் சிறு பிராந்தியத்தில், இந்தத் தீவிரக் கருத்தியல்களுக்கு மாற்றாக முடியும் என்கிற நம்பிக்கையில், சில சிறு கட்சிகள் சஞ்சரிக்கின்றன. அப்படியான ஒரு கட்சியின் தலைவராக திகழும் பிர்கிட் நைபோர்க் எனும் பெண் தலைவரின், ஏற்றமும் வீழ்ச்சியும் நிறைந்த அரசியல் பயணமே இந்தத் தொடர்.

அவரின் பயணத்தின் வழியே, அரசியலின் மேன்மைகளும் அவலங்களும் ஈவு இரக்கமற்ற துரோகங்களும் நமக்கு உணர்த்தப்படுகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன்னும், பின்னும் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்து எப்படி அதனை நீர்த்துப் போகச் செய்கின்றன என்பதை இந்தத் தொடர் எந்த மதிப்பீடுகளுமின்றி, சரி - தவறு எனும் வரைமுறைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் உண்மைக்கு வெகு அருகிலிருந்து காட்சிப்படுத்தியுள்ளது. அரசியலும் ஊடகமும் எவ்வாறு பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பது இந்தத் தொடரில் வெகு இயல்பாக நமக்கு உணர்த்தப்படுகிறது.

ஒழுக்க நெறிகளையும் கொள்கைகளையும் இழக்காமல், ஒருவரால் அரசியலில் ஈடுபட முடியும், வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் வகையில் 'பிர்கிட்'டின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை உணர்ந்துதான் என்னவோ 'சிட்ஸ் பாபெட் நுட்சன்' பிர்கிட் எனும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

சமூகம் என்கிற அமைப்பை உடையாமல் கட்டிக் காக்கும் இணைப்பு கயிறுகளில் வலிமையானது அரசியலே. உணவு, உடை போன்று அரசியலும் நம்முடைய இருப்புக்கு அவசியம். நிலம் மாறினாலும், இனம் மாறினாலும், மொழி மாறினாலும், உலகெங்கும் நிறைந்திருக்கும் அரசியலின் மொழி ஒன்றே. அதனால்தான், டென்மார்க்கில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், நம் நாட்டுக்கு மட்டுமல்ல; நம் மாநிலத்துக்கும் பொருத்தமானதாக உள்ளது. இந்தத் தொடரின் வெற்றிக்கும் இதுவே காரணம்.

தொடர்புக்கு: mohamed.hushain@tamilhindu.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x