Published : 25 May 2021 06:00 PM
Last Updated : 25 May 2021 06:00 PM
கரோனா 2-வது அலையின் தீவிரத்தில் பல படங்கள் முடங்கியிருப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து, தொடர்ச்சியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது திரையுலகம். பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகி சுமார் ஓராண்டுக்கும் மேலாக வெளியிட முடியாமல் இருக்கின்றன.
தமிழ்த் திரையுலகில் கரோனா முதல் அலையின் தீவிரம் குறைந்தவுடன், திரையரங்குகள் திறக்கப்பட்டன. அப்போது சில படங்கள் வெளியாகின. இதில் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' மட்டுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதர படங்கள் யாவுமே பெரிதாக எடுபடவில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
இதனிடையே, தற்போது கரோனா 2-வது அலையின் தீவிரம் தமிழகத்தில் கடுமையாக உள்ளது. இதனால் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கோடை விடுமுறைக்குத் திட்டமிடப்பட்ட எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கரோனா முதல் அலையின் தீவிரம் முடிந்தவுடனேயே, பைனான்சியர்களும் பெரிதாக பைனான்ஸ் செய்வதில்லை. அதிலும், தற்போது 2-வது அலை தொடங்கியவுடன் பைனான்ஸ் செய்வதையே நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால், பணம் கொடுத்தால் என்னவாகும் என்ற பயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது 70% முடிக்கப்பட்ட படங்களுக்குக் கூட இனிமேல் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
ஏற்கெனவே அனைத்துப் பணிகளும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதுதான் தயாரிப்பாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால், படங்கள் அனைத்தையுமே மிகவும் குறைந்த விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் விலை பேசியுள்ளன. திரையரங்குகள் மூடல், தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடி ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாக்கி விலையைக் குறைத்துக் கேட்டுள்ளனர். இதனால் பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தற்போதுள்ள சூழல் குறித்து முன்னணித் தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது, "உண்மையில் இந்த கரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகமான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது திரையுலகம்தான். இப்போது 2-வது அலையின் தீவிரத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகிறோம். ஒருபுறம் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று, படங்கள் முடக்கம், பைனான்சியர்களின் கைவிரிப்பு எனத் தத்தளித்து வருகிறோம். இந்த கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன்தான் என்ன செய்யலாம் என்ற யோசனைக்கே வரமுடியும்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT