Published : 23 May 2021 12:15 PM
Last Updated : 23 May 2021 12:15 PM
அவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்தியாவில் கரோனா தொற்றின் 2-வது அலையின் தீவிரம் கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனைக் கட்டுப்படுத்த நாளை (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதற்காக இன்று ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை முதலே பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்து வருகிறார்கள். இதனை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடிகர்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி நமக்கு பெரும் அச்சமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நிறைய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்க நமது தமிழக அரசும், சுகாதாரத் துறையும் நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நமக்கு நிறைய விதிமுறைகளைச் சொல்லியிருக்கின்றனர். அதில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த வீடியோ.
அதில் மிக முக்கியமானது கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் எனது முதல் ஊசியைப் போட்டுக்கொண்டுவிட்டேன். மிக மிக அவசியமாக இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். அப்படி வெளியே வரும்போது சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள். நம் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக, வெளியே செல்லும் போது முகக்கவசத்தை அணியுங்கள். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்தது தான். இவற்றைக் கடைப்பிடிப்பது நம் கடமை. கரோனா பற்றிய பயம் இல்லாமல், தன் குடும்பத்தை, உயிரை மறந்து, அதோடு போராடிக் கொண்டிருக்கும் முன்களப் பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை இதுவாகத்தான் இருக்கும்.
நாம் அனைவரும் நினைத்தால் கண்டிப்பாக இதிலிருந்து மீண்டு வர முடியும். ஒன்றிணைவோம். கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம். கரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம்"
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
#StayHomeStaySafe#DefeatCorona pic.twitter.com/Geqj8Xet6g
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) May 21, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT