Published : 20 May 2021 11:04 AM
Last Updated : 20 May 2021 11:04 AM
அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான டவ்-தே புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ அண்ட் டாமன், குஜராத் மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் கடந்த 17ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.
இதனால் புயல் கரையைக் கடந்தபோது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடுமையான மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடும் காற்றுடன் மழை பெய்ததில் ‘மைதான்’ படத்துக்காக மும்பை புறநகர் பகுதிகளில் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட அரங்குகள் பலத்த சேதமடைந்தன.
அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மைதான்'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்துக்காக மும்பையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதான அரங்குகளை அமைத்து படமாக்கி வந்தது படக்குழு. கடந்த ஏற்பட்ட கரோனா பாதிப்பினாலும், மழை எச்சரிக்கையாலும் இந்த அரங்குகள் அகற்றப்பட்டு படப்பிடிப்பும் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் கடந்த 17ஆம் தேதி அன்று பெய்த கனமழையால் இந்த அரங்குகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை பெய்த அன்று அரங்கில் 40க்கும் அதிகமானோர் இருந்ததாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை எனவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT