Published : 19 May 2021 04:30 PM
Last Updated : 19 May 2021 04:30 PM

சைலஜா டீச்சரை மீண்டும் அமைச்சர் பதவிக்குக் கொண்டு வாருங்கள்: கேரள நடிகைகள் கோரிக்கை

சைலஜா டீச்சரை கேரள மாநிலத்தின் சுகாதார அமைச்சராக மீண்டும் நியமிக்க வேண்டும் என்று கேரளத் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக எம்.வி.கோவிந்தன், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், வி.என்.வாசன், சஜி செரியன், வி.சிவன்குட்டி, முகமது ரியாஸ், மருத்துவர் ஆர்.பிந்து, வீணா ஜார்ஜ், வி.அப்துல் ரஹ்மான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

கரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு பெருந்தொற்றுகளைச் சிறப்பாகக் கையாண்டு உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற முன்னாள் சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு இம்முறை எந்தப் பொறுப்பும் அமைச்சரவையில் கொடுக்கப்படாமல் போனது பலருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்நிலையில், கேரள நடிகைகள் பலரும் சைலஜா டீச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிறப்பாகச் செயல்பட்டவரை மீண்டும் பதவிக்குக் கொண்டு வருவது குறித்து பினராயி விஜயன் யோசிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

"அமைச்சரவையில் சைலஜா டீச்சருக்கென ஓர் இடம் உள்ளது. நம் மாநில மக்கள் அவரது சிறந்த தலைமையின் கீழ் இருக்க உரியவர்கள். இதற்கு எந்த சப்பைகட்டும் கிடையாது. மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஓரங்கட்டுவது கட்சியை ஒரு கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளுகிறது. உடனடியான, திறமையான ஆட்சியைத் தவிர இப்போதைய முக்கியத் தேவை என்ன? எங்கள் டீச்சரை மீண்டும் கொண்டு வாருங்கள்" என்று நடிகை பார்வதி திருவோத்து ட்வீட் செய்துள்ளார்.

''இப்போது இல்லையென்றால் பின் எப்போது அவர் நம் மாநிலத்துக்குத் தேவைப்படுவார்?'' என்று நடிகை ரம்யா நம்பீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

''நமக்குக் கிடைத்த மிகச்சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் ஒருவர் சைலஜா. அவருக்கு இந்தத் தொற்றுக் காலத்தில் அமைச்சரவையில் இடமில்லையா? என்னதான் நடக்கிறது பினராயி விஜயன்?'' என்று நடிகை மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார்.

நடிகை ரீமா கல்லிங்கலும் இந்த முடிவுக்கு எதிராகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டேகில் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x