Published : 13 May 2021 01:56 PM
Last Updated : 13 May 2021 01:56 PM
தற்போதைய சூழல் சகஜமாகி திரையரங்குகள் திறக்கப்பட்டதும் கண்டிப்பாக ராதே திரையரங்குகளில் வெளியாகும் என்று சல்மான் கான் பேசியுள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான், மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'ராதே'. 'வெடரன்' என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நெருக்கடியால் தள்ளிப்போனது.
ஊரடங்கு தொடர்வதாலும், இனிமேலும் ரசிகர்களைக் காக்க வைக்க முடியாது என்பதாலும் படத்தை இன்று முதல் (மே 13 அன்று) ஜீ ப்ளெக்ஸ் தளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி ஓடிடி வெளியீடு குறித்துப் பேசியுள்ள படத்தின் நாயகன் சல்மான் கான், "இந்த ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு திரையரங்குகள் திறந்த பின் கண்டிப்பாக ராதே படத்தை வெளியிடுவோம். ஏனென்றால் ஓடிடியில் பார்க்காத, திரையரங்கில் மட்டுமே பார்க்க விரும்பும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வெளிநாட்டில் படம் இப்போது வெளியாகியுள்ளது. வழக்கமாக நாங்கள் வெளியிடும் எண்ணிக்கையில் அல்ல, ஆனால் வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டுக்கு திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இந்த சூழலில் இதைச் செய்வதுதான் சரி. தொற்று காலம் முடிந்ததும் படத்தை வெளியிடலாம் என்று நினைத்தோம். ஆனால் அது முடியும் போல தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு கூட ராதே திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியிட கோரிக்கை எழுந்து நாங்கள் ஏற்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனென்றால் ராதே வந்தால் மீண்டும் திரையரங்குக்குக் கூட்டம் வரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை" என்று சல்மான் பேசியுள்ளார்.
மேலும் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்க்க வேண்டாம் என்றும், ஈகைத் திருநாளுக்கு படம் வெளியாகும் என்று தான் கொடுத்த வாக்கைக் காப்பாறியது போல ரசிகர்களும் படத்தை நியாயமான தளத்தில் பார்ப்பார்கள் என்ற வாக்கைத் தர வேண்டும் என்று சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT