Published : 12 May 2021 06:45 PM
Last Updated : 12 May 2021 06:45 PM

கரோனா தடுப்புப் பணி; நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ரூ.1 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினர்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (மே 12) நேரில் சந்தித்த நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை கரோனா தடுப்புப் பணிக்காக வழங்கினர்.

முன்னதாக நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், கரோனா பேரிடரை ஒட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்கள் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என முதல்வர் உறுதியளித்திருந்தார்.

மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் மற்றும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இவ்வாறு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(c)-ன்கீழ் 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x