Last Updated : 05 May, 2021 02:43 PM

 

Published : 05 May 2021 02:43 PM
Last Updated : 05 May 2021 02:43 PM

பெங்களூரு கோவிட் நோயாளிகளுக்கு உதவிய சோனு சூட்

பெங்களூருவின் அராக் மருத்துவமனையில் உள்ள கோவிட் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டதால் சோனு சூட் மற்றும் அவரது அணியினர் சேர்ந்து இரவு முழுவதும் அலைந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். சோனு சூட்டின் உதவியால் கிட்டத்தட்ட 22 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை அன்று யெலஹன்கா பகுதியைச் சேர்ந்த ஆய்வாளர் சத்யநாராயணன் என்பவர் சோனு சூட்டின் அறக்கட்டளைக்கு அழைத்து உதவி கேட்டார். அராக் மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் இல்லையென்றும், ஏற்கெனவே இதனால் அங்கு 2 பேர் இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

உடனடியாகக் களத்தில் இறங்கிய குழுவினர், நள்ளிரவே ஆக்சிஜன் சிலிண்டருக்கான ஏற்பாட்டைச் செய்தனர். தங்கள் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு, சூழலின் அவசர நிலையைக் கூறி உதவி கேட்டிருக்கின்றனர். அடுத்த சில மணி நேரங்களில் 15 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டன.

"பொதுமக்கள் சிலரின் உதவியோடு முழுக்க முழுக்க இது குழுவின் முயற்சி. எங்களுக்கு அழைப்பு வந்த உடனேயே அதைச் சரிபார்த்து சில நிமிடங்களில் வேலைகளைத் தொடங்கிவிட்டோம். மொத்த இரவும் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்கள் குழுவின் எண்ணமாக இருந்தது. தாமதமாகியிருந்தால் பல குடும்பத்தினர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்திருப்பார்கள்.

நேற்றிரவு பல உயிர்களைக் காப்பாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். எனது குழுவின் இதுபோன்ற வேலைகள்தான் இன்னும் என்னை உழைக்க உந்தித் தள்ளுகிறது. மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல வைக்கிறது. இந்தப் பணி முடியும் வரை எங்கள் குழுவோடு தொடர்பிலிருந்த ஹஷ்மத்தை நினைத்து நான் பெருமையடைகிறேன்" என்று சோனு சூட் கூறியுள்ளார்.

காவல்துறையும் இந்தச் சூழலில் உதவி செய்யக் களத்தில் இறங்கியுள்ளனர். ஆம்புலன்ஸை ஓட்டிச் செல்ல ஓட்டுநர் இல்லாத சூழலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏறி நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x