Published : 05 May 2021 02:21 PM
Last Updated : 05 May 2021 02:21 PM
'என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி' என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற தெம்மாங்குப் பாடகர், நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவருக்கு வயது 87.
1933ஆம் ஆண்டு பிறந்தவர் டி.கே.எஸ். நடராஜன். சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் எண்ணற்ற தெம்மாங்குப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். பிரபல நாடகக் குழுவான டி.கே.எஸ். கலைக்குழுவில் நடித்ததால் இவரது பெயருக்கு முன்னால் டி.கே.எஸ். என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.
பாடல் தவிர்த்து ஏராளமான திரைப்படங்களிலும் நடராஜன் நடித்துள்ளார். 'ரத்தபாசம்', 'நாடோடி', 'நீதிக்குத் தலைவணங்கு', 'பொன்னகரம்', 'தேன் கிண்ணம்', 'கண்காட்சி', 'பகடை பனிரெண்டு', 'ராணி தேனீ', 'ஆடு புலி ஆட்டம்', 'பட்டம் பறக்கட்டும்', 'மங்களவாத்தியம்', 'உதயகீதம்', 'ஆனந்தக் கண்ணீர்' ,' இதோ எந்தன் தெய்வம்', 'காதல் பரிசு' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடராஜன் நடித்துள்ளார்.
‘வாங்க மாப்பிள்ளை வாங்க' படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வெளியான 'என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி' என்ற பாடல் இவரைப் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இப்பாடல் மீண்டும் அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டு பிரபலமானது.
இந்நிலையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.எஸ். நடராஜன் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT