Published : 04 May 2021 07:45 PM
Last Updated : 04 May 2021 07:45 PM

கடினமான சூழலிலிருந்து மீண்டு வர ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்: அனுஷ்கா பகிர்வு

ஹைதராபாத்

கடினமான சூழலிலிருந்து மீண்டு வர நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும், திரையுலக பிரபலங்களும் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே தனிமையில் இருக்கிறார்கள்.

பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கரோனா தொடர்பான உதவிகளைப் பகிர்ந்து வருகிறார்கள். தற்போது கரோனா 2-வது அலையின் தீவிரம் குறித்து அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இது சோதனையான காலகட்டமாக இருக்கிறது. அனைவரும் அவர்களால் முடிந்த சிறப்பான உதவிகளைச் செய்ய முயல்கின்றனர். ஈடுசெய்ய முடியாத இழப்புகளைச் சந்திக்கின்றனர். இந்தக் கடினமான சூழலிலிருந்து மீண்டு வர நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம். தயவுசெய்து விதிமுறைகளைப் பின்பற்றுங்கள். வீட்டிலேயே இருங்கள்.

சுய ஊரடங்கைக் கடைப்பிடியுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்ந்து பேசுங்கள். எல்லோருக்குமே அவர்கள் நினைக்கும் விஷயத்தை வெளிப்படுத்தத் தெரியாது. மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைப் பாருங்கள். நேர்மறையாக இருங்கள். அனைவரையும் தேற்ற அந்த ஆற்றல்தான் நமக்குத் தேவை.

உங்களால் முடிந்தது ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும் அதைச் செய்து உதவுங்கள். நாம் இதைக் கடந்து வருவோம். இந்தத் தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி எதிர்மறையான விஷயங்களில் நம் சக்தியை வீணடிக்க வேண்டாம்.

மனிதர்களாக இருக்கும் வலிமையை நாம் உண்மையில் சேர்ந்து, ஒன்றிணைத்து, இதிலிருந்து அழகாக வெளியே வரலாம். அனைவருக்கும் என் நிறைய அன்பும், பிரார்த்தனைகளும்".

இவ்வாறு அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x