Published : 04 May 2021 12:56 PM
Last Updated : 04 May 2021 12:56 PM

ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்

கோவை

விரைவில் தமிழ்த் திரையுலகினர் சார்பில் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும் என்று திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். திமுக ஆட்சியமைக்கப் போகிறது என்றவுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வியாபார நிபுணர்கள் எனப் பலரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்கள் மத்தியில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியதாவது;

"விரைவில் ஆட்சியமைக்கப் போகும் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திமுக வெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், தலைவர் கலைஞர் கலந்துகொள்ளும் முதல் பாராட்டு விழா திரையுலகினரின் பாராட்டு விழாவாகத்தான் இருக்கும். ஏனென்றால், திரையுலகை எப்போதுமே தனது தாய் வீடு என்பார்.

இந்த முறையும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், நடிகர் சங்கம், பெப்ஸி என அனைத்தும் இணைந்து புதிய அரசுக்குப் பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். இந்த கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய பாராட்டு விழாவில்தான் கலந்து கொள்வார் என்று நம்புகிறோம்.

தலைவர் கலைஞர் இருக்கும்போது, திரைத்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் செய்தார். இந்தியாவிலேயே முதன்முறையாக வரியைக் குறைத்தது கலைஞரின் ஆட்சியில்தான். ஒவ்வொரு முறை ஆட்சியிலும் திரைத்துறையினருக்கு ஏராளமான சலுகைகள் கொடுத்துக் கொண்டுதான் வந்தார். படத்துக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரி கிடையாது என்பதை கலைஞர்தான் அறிவித்தார். அதற்கு எப்போதுமே நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, பெரிய அளவுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். சென்னையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்ததுபோல், தமிழகத்திலும் பெரிய மாறுதலைக் கொண்டு வருவார். எங்களுடைய கோரிக்கைகளைச் சொன்னால் நிச்சயமாக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பார் என்று நம்புகிறோம்.

இந்த கரோனா அச்சுறுத்தல் காலத்தில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளானது தமிழ்த் திரையுலகம்தான். திரையரங்குகள் சுமார் ஓராண்டாக மூடியே வைக்கப்பட்டுள்ளன. இந்த கரோனா அச்சுறுத்தல் காலத்தில் சொத்து வரி, தொழில் வரி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்டவற்றைப் பல மாநிலங்களில் தள்ளுபடி செய்துள்ளார்கள். அதேபோல் தமிழகத்திலும் தள்ளுபடி செய்தால் ரொம்ப நன்றியுடையவர்களாக இருப்போம். 8% உள்ளாட்சி வரி இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இதை நீக்குவதற்குக் கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்த வரியை நீக்கிவிட்டால் டிக்கெட் கட்டணம் குறையும்".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x