Published : 30 Apr 2021 12:44 PM
Last Updated : 30 Apr 2021 12:44 PM

தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது: சிலம்பரசன் அறிக்கை

தொடர்ச்சியான மரணங்கள் தனக்கு அதிர்ச்சியைத் தருகிறது என்று நடிகர் சிலம்பரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகத்தினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் சிலம்பரசன் கூறியிருப்பதாவது:

''மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே வி ஆனந்த் அவர்கள். கோ படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே வி ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு.

அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்".

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x