Published : 27 Apr 2021 11:15 AM
Last Updated : 27 Apr 2021 11:15 AM
பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரான ராமு கோவிட் கரோனா தொற்று காரணமாக திங்கட்கிழமை மாலை (ஏப்ரல் 26) காலமானார். அவருக்கு வயது 52.
இது குறித்துப் பேசிய கன்னட திரைப்பட அகாடமி தலைவரும், ராமுவின் குடும்ப நண்பருமான சுனில் புரானிக், "மிகவும் அரிய வகை தயாரிப்பாளர்களில் ஒருவர். தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்றதோடு அவரது பெயரை வைத்தே படங்கள் ஓடும் அளவும் பெயர் பெற்றிருந்தார். ஒரு நாயகன், இயக்குநர், இசையமைப்பாளர் பெயரை விட இவரது பெயரை வைத்து ஓடிய படங்கள் அதிகம். அதுவே ரசிகர்களை ஈர்த்தது. படத்துக்காக பிரம்மாண்ட செலவு செய்யத் துணிந்தவர். இதற்காகத்தான் அவருக்கு கோடி ராமு என்ற பெயரும் கிடைத்தது" என்று கூறினார்.
90-களில் கன்னடத் திரைப்படங்களுக்கு சிறிய சந்தை இருந்த சமயத்திலேயே ஒரு கோடி வரை திரைப்படங்களுக்காகச் செலவழித்தவர் ராமு. முதலில் விநியோகஸ்தராக இருந்த ராமு பின்னர் தயாரிப்பாளராக மாறினார். ராமு எண்டர்ப்ரைஸ் என்கிற பெயரில் 30க்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்தார்.
துறையில் தனெக்கன ஒரு பெயரை சம்பாதித்த ராமு, அப்போது பிரபலமாக இருந்த நடிகை மாலாஸ்ரீயை மணந்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ராமு தயாரித்த பல படங்களில் மாலாஸ்ரீ நடித்துள்ளார்.
கடைசியாக 2019-ஆம் ஆண்டு, தமிழில் வெளியான '96' திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான '99' திரைப்படத்தை ராமு தயாரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT