Published : 27 Apr 2021 09:27 AM
Last Updated : 27 Apr 2021 09:27 AM
கரோனா பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தாமிரா காலமானார். அவருக்கு வயது 52.
திருநெல்வேலியை சேர்ந்தவர் தாமிரா என்ற காதர் முகைதீன்.
மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா. 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் 'ரெட்டைச் சுழி' என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே பாரதிராஜா, பாலச்சந்தர் என்ற தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச இயக்குநர்களை சேர்த்து நடிக்க வைத்து கவனம் ஈர்த்தார்.
ஆனால் 'ரெட்டைச் சுழி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதன் பின் பல ஆண்டுகள் கழித்து சமுத்திரகனி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் 'ஆண் தேவதை' என்கிற திரைப்படத்தை தாமிரா இயக்கியிருந்தார். இந்தப் படமும் சுமாரான வெற்றியே பெற்றது.
தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்திருந்த தாமிராவுக்கு அண்மையில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் இருக்கும் மாயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 27) காலை, சிகிச்சை பலனின்றி தாமிரா உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT