Published : 26 Apr 2021 06:17 PM
Last Updated : 26 Apr 2021 06:17 PM
'கேப்டன் அமெரிக்கா' திரைப்படத்தின் 4-வது பாகத்துக்கான வேலைகளை மார்வல் ஸ்டுடியோஸ் தொடங்கியுள்ளது.
மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் உலக அளவில் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ளன. இந்தத் திரை வரிசையில் வெளியான ஒவ்வொரு படமும் பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படங்களில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்துக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
இதுவரை 'கேப்டன் அமெரிக்கா ஃபர்ஸ்ட் அவெஞ்சர்', 'கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்', 'கேப்டன் அமெரிக்கா சிவில் வார்' ஆகிய திரைப்படங்கள் இந்தக் கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து வெளியாகியுள்ளன. மூன்று படங்களுமே பெரிய வெற்றி பெற்றன.
'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்தோடு, முதல் மூன்று திரைப்படங்களில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்ரிஸ் ஈவன்ஸின் பங்கு முடிந்தது. தனது பொறுப்பை அவர் இன்னொரு முக்கியக் கதாபாத்திரமான சாம் வில்ஸனிடம் கொடுப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து சாம் வில்ஸன் என்கிற ஃபால்கனும், பக்கி பார்ன்ஸ் என்கிற விண்டர் சோல்ஜர் கதாபாத்திரமும் இணைந்து தோன்றிய 'தி ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர்' வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இந்தத் தொடரின் அத்தனை பகுதிகளும் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.
அடுத்தகட்டமாக, இந்த சீரிஸுக்குத் திரைக்கதை எழுதிய மால்கம் ஸ்பெல்மேனை வைத்து 'கேப்டன் அமெரிக்கா 4' திரைப்படத்துக்கான வேலைகளை மார்வல் ஸ்டுடியோஸ் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. சீரிஸில் பணிபுரிந்த மற்றொரு எழுத்தாளரான டாலன் முஸோனுடன் இணைந்து ஸ்பெல்மேன் திரைக்கதை எழுதவுள்ளதாக ஹாலிவுட் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் சாம் வில்ஸன் கதாபாத்திரமே பிரதானமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆந்தனி மெக்கீ இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT