Published : 17 Apr 2021 01:16 PM
Last Updated : 17 Apr 2021 01:16 PM
என்னால் முடியவில்லை, என்ன பேசுவதென்று தெரியவில்லை என விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
வடிவேலு - விவேக் இருவருமே நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், பின்பு தனித்தனியாக காமெடி ட்ராக்களில் நடிக்கத் தொடங்கினார்கள். தற்போது விவேக்கின் மரணம் தொடர்பாக வடிவேலு கண்ணீர் மல்கப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கண்ணீருடன் வடிவேலு பேசியிருப்பதாவது:
"விவேக்கைப் பற்றி பேசும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது. ரொம்ப நல்லவன். உதவுற சிந்தனை அதிகம் உள்ளவன். அப்துல் கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். அதே மாதிரி விழிப்புணர்வு பிரச்சாரம், மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். ரொம்ப உரிமையாக என்னடா வடிவேலு... என்ன விவேக்கு என்று பேசிக் கொள்வோம்.
அவனை மாதிரி ஓப்பனாக பேசக் கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதியுற மாதிரியே இருக்கும். என்னைவிட எதார்த்தமாக, எளிமையாகப் பேசுவான். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
என்னால் முடியல.. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா. நான் மதுரையில் தாயாருடன் இருக்கேன். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவேக்கின் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டும். விவேக் எங்கும் சென்றுவிடவில்லை. உங்களுடன் தான் இருக்கிறான். மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்"
இவ்வாறு வடிவேலு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT