Published : 13 Apr 2021 01:30 PM
Last Updated : 13 Apr 2021 01:30 PM
நடிகர் செந்திலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாடு முழுவதும் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,36,89,453 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் 879 பேர் பேர் பலியாகியுள்ளனர்.
தமிழத்திலும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்பட பலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவி குஷ்புவுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இயக்குநர் சுந்தர்.சிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இன்று (ஏப்.13) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில் அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்தச் சூழலில் தொற்று இருப்பதற்கான லேசான அறிகுறிகள் தென்படவே செந்திலுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
செந்திலைத் தொடர்ந்து அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செந்திலின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT